பெங்களூர்:
கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரண்டு மனைகளை வாங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி வட்டம், ஹெக்கனஹள்ளி கிராமத்தில் கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் அரவிந்த்ஜாதவின் தாயார் தாராபாய் மாருதிராவ் ஜாதவ் சட்ட விரோதமாக நிலம் வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே இடத்தில் இரண்டு மனைகளை நடிகர் ரஜினிகாந்த் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விவசாய நிலத்தை மேம்படுத்தி விவசாயமல்லாத நிலமாக மாற்றி, ஏமாற்றி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக தலைமைசெயலாளரின் தாயார் சட்டவிரோதமாக நிலம் வாங்கி விற்று பணம் சம்பாதித்துள்ளதாக எழுந்த புகாரையொட்டி, இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தரைமையா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக தலைமை செயலாளர் பதவி விலக வேண்டும் எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் தலைமை செயலாளரின் தாயார், தாராபாய் மாருதிராவ் ஜாதவ் மேம்படுத்திய நிலத்தில் நடிகர் ரஜினிகாந்த் 2 வீட்டுமனைகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
1985-ம் ஆண்டு தாராபாய் மாருதிராவ் ஜாதவ் 16.25 ஏக்கர் விளைநிலத்தை ரூ.48 ஆயிரத்திற்கு வாங்கியிருக்கிறார். 1990-இல் இந்தநிலத்தை அடமானம் வைத்து கர்நாடக ஆரம்ப நிலவள வங்கியில் ரூ.79,200 கடனுதவியும் பெற்றிருக்கிறார்.
1996-97ம் ஆண்டுவாக்கில் இந்த நிலத்தை விவசாயம் அல்லாத நிலமாக மாற்றி, அதற்கு பெங்களூரு மாநகர மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலை பெற்று வீட்டுமனைகளாக மேம்படுத்தியிருக்கிறார்.
1997 முதல் 2001-ஆம் ஆண்டு வரையில் இந்த நிலத்தை விற்று ரூ.82.52 லட்சம் வரை சம்பாதித்திருப்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. விவசாயியாக இல்லாத நிலையில், விளைநிலத்தை வாங்கி அதை விவசாய மல்லாத நிலமாக மாற்றி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாராபாய் மாருதிராவ் ஜாதவுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய இந்த நிலத்தில் சர்வே எண் 80-இல் நடிகர் ரஜினிகாந்த் 0.813 ஏக்கர் பரப்பளவு கொண்ட 2 வீட்டுமனைகள் வாங்கியிருக்கிறார். 2 வீட்டுமனைகளுக்கான கிரைய பத்திரம் 1997 ஆக.11-ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. பத்திரத்தில் கொள்முதல் செய்வோரின் பெயர் சிவாஜிராவ் கேய்க்வாட் (எ)ரஜினிகாந்த் தபெ ரானோஜிராவ் என்றும், முகவரி: போயஸ்கார்டன், சென்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட முதல் வீட்டுமனை(மனை எண் 4) ரூ.3.25 லட்சத்திற்கும் 0.35 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டாவது வீட்டுமனை (மனை எண் 4-ஏ)ரூ.2.25 லட்சத்திற்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கெம்பேகெüடா பன்னாட்டுவிமானநிலையத்தின் அருகே அமைந்துள்ள இந்த வீட்டுமனையில் நடிகர் ரஜினிகாந்த் பண்ணைவீடு ஒன்றை கட்டியுள்ளதாக ஹெக்கனஹள்ளி கிராமவாசிகள் தெரிவித்தனர்