புதுடெல்லி:
ஏர்செல்மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
ஏர்செல் மேக்சிஸ் நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனத்தலைவருமான கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்களின் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதி ஓ.பி. சைனி முன் நடைபெற்று வருகிறது
ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 700 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு என்ன காரணத்தினால் செய்யப்பட்டது என்பது கேள்வியாக எழுகிறது. இது தொடர்பாக பண மோசடி பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் விற்பனை ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் மத்திய அமலாக்கத்துறை தங்களை கைது செய்யாமல் இருக்க தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன்,முன்ஜாமின் வழங்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் மீது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணை பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப் பட்டு, இன்றுடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் தயாநிதி, கலாநிதி , இவரது மனைவி காவேரி ஆகியார் ஆஜராகியுள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.
சன் குழுமத்தை சேர்ந்த 3 பேருக்கும் ஜாமின் கொடுக்க சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் எதிர்ப்புக்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் தருமாறு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் விரைவாக விசாரணை நடத்த, சி.பி.ஐ.க்கு, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அவ்வப்போது, வழக்கில் கால அவகாசம் கேட்பதை தவிர்த்து விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சி.பி.ஐ.க்கு, நீதிபதி ஒ.பி.சைனி அறிவுறுத்தினார்