அரசியலில் இறங்க திட்டமிட்டு செயல்படுகிறார் விஷால் என்று ஏற்கெனவே எழுதியிருந்தோம். அது மேலும் உறுதியாகியிருக்கிறது.
தமிழகம் முழுதும் சென்று ரசிகர்களை சந்திப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று அரசியல்வாதிகள் போலவே செயல்பட்டு வந்தார். நடிகர் சங்க தேர்தலில், “அநியாயத்தை எதிர்ப்பேன்” என்று முழங்குகிறார்.
அதுமட்டுமல்ல.. இரு நாட்களுக்கு முன் தனது பிறந்தநாளை, ஈழத்தமிழ் அகதிகளுடன் கொண்டாடியிருக்கிறார்.
“நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து இயங்கி வருகிறார் விஷால். இதையடுத்து தெலுங்கரான விஷால், தமிழ் நடிகரான சரத்குமாரை எதிர்ப்பதா” என்று சிலர் குரல் எழுப்பினார்கள். இந்த குரலை அடைக்கவும், அரசியலில் ஈடுபடவுமே ஈழத்தமிழர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்று பேச்சு அடிபட்டது.
இது குறித்து விஷாலிடம் நேரடியாக கேட்ட போது, “நான் தாமிரபரணி படபிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் தங்கியிருந்த போது தான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகாம் பற்றி அறிந்துகொண்டேன். என் அண்ணி ஸ்ரேயாவின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் “OFERR” என்னும் அமைப்பின் மூலம் ஈழ அகதிகளுக்கு உதவி வருகிறார். இப்போது அவருடன் இணைந்து நானும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறேன்” என்றவர், “இதற்கு சிலர் அரசியல்சாயம் பூசுகிறார்கள். ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சத்தியமாக கிடையாது” என்றார் சூடம் ஏற்றாத குறையாக.
“ஆனால் பிறந்தநாளுக்கு மறுநாள், தேசிய கட்சி தலைவர் ஒருவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் விஷால்” என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.
ஆக வரும் சட்டமன்றத் தேர்தலில், “பெரியோர்களே, தாய்மார்களே..” என்று களமாட பேகிறார் விஷாலார்!
அது சரி… ஓட்டு கேட்டு போகும்போது இப்படி அலப்பறை பண்ணாம, அமைதியா வேட்டி சட்ட போட்டு போங்கப்பு!