புதுடெல்லி:
டந்த 10 வருடங்களாக  இழுபறியாகிக் கொண்டிருந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெரும்பாலான மாநிலக்கட்சிகள் ஆதரவு தரும் நிலையில் அதிமுக  மட்டுமே எதிர்த்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா நிறைவேறியது வரலாற்று முக்கியமான நிகழ்ச்சி என்று பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார்.
gst
ஜிஎஸ்டி… ஜிஎஸ்டி… என்று  பல ஆண்டுகளாக மத்திய அரசும், பொருளாதார வல்லுநர்களும் சொல்லிக்கொண்டிருந்த வேளையில்,  முந்தைய காங்கிரஸ் அரசும் சரி, தற்போது ஆளும் பாரதியஜனதா அரசும் சரி…  ஏன் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன…  ? அதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?  ஜிஎஸ்டி என்றால் என்ன…?
நமது நாட்டில்ஒ, வ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வகையான வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது.  வரி வருமானமே ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை நிர்மானிக்கிறது.
குறிப்பாக விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி, கல்விக்கு செஸ் வரி, சர்சார்ஜ் போன்ற பல்வேறு வரிகள் உள்ளன.  மாநிலத்திற்கு மாநிலம் வரி விதிப்பின் அளவும் மாறுபடுகிறது.
ஒரு பொருள்  உற்பத்தி செய்யப்பட்டு, அது மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவது வரை  பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டு,  வரிக்காண பணத்தை  மத்திய, மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயம்  உற்பத்தியாளர்களுக்கு உள்ளது. இதன் காரணமாக பொருட்களின் விலை தாறுமாறாக உயர்கிறது.
இதுபோன்ற பல வகையான வரிகள் வசூலிக்கப்படுவதை தவிர்த்து, இவை அனைத்துக்கும் சேர்த்து ஒரே ஒரு வரி மட்டும் வசூலிப்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி என்பது. அதாவது ஜிஎஸ்டி வரி (Goods and Services Tax) எனப்படுவதாகும்.
gst-function
இந்த புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தினால் விலைவாசி கட்டுப்படுத்தப்படும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பது பெரிய தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.
காரணம், ஒரு பொருளுக்கு செலுத்தப்படும் வரியானது, உற்பத்தி செலவைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.
இதனால், உற்பத்தியாளர்கள் அரசுக்கு செலுத்தும் வரித்தொகையையும் சேர்த்தே அந்த பொருளின் விலையை தீர்மானிக்கிறார்கள். அரசுக்கு  செலுத்தும் வரித் தொகை உற்பத்தி பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது.  இதன் காரணமாக பொருளின் விலை மேலும் அதிகரிக்கிறது.
இதனால்  பாதிக்கப்படுவது  நுகர்வோராகிய பொதுமக்கள்தான். இதற்கு மேலும் நாம் வாட் வரியும் செலுத்த வேண்டும். இதனால் பொருளின் விலை இன்னும் அதிகமாகிறது.
இந்த பலமுனை வரி பிரச்னைகளுக்கு முடிவு, ஒரே ஒரு வரிதான். அந்த ஒரேஒரு வரி பற்றியதுதான் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி. இதனால் அனைவருக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேவிதமான வரி விகிதம்தான் இருக்கும்.  
ஜிஎஸ்டி மூலம் எத்தனை சதவிகிதம் வரி விதிப்பு இருக்கும் என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. குறைந்தது 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை வரி விதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் மாநிலங்களில் செயல்பட்டு வரும், ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு துறை  போன்று தனித்தனியாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரே ஒரு துறை மட்டுமே போதுமானது.
இதன் காரணமாக உற்பத்தியாளர்கள் படும் சிரமம் குறையும், லஞ்ச லாவண்யமும் தடுக்கப்படும், கறுப்புப் பண பரிமாற்றம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி செலுத்தாமல் தொழில் செய்பவர்கள் , இனி வரி செலுத்தி தொழில் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகும்.  வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிகமாகும்போது, நாட்டின் வருமானமும் அதிகரிக்கும்.  வருமானம் அதிகரிக்கும்போது நாட்டின் வளர்ச்சிப் பணிகளும் வேகமாக செயல்படும்.
ஜிஎஸ்டியால் யாருக்கு லாபம்? 
ஜிஎஸ்டி எனப்படும் ஒற்றை வரி விதிப்பு முறையால் உற்பத்தி செய்யும் பொருளின் விலைகள் ஓரளவுக்காவது குறையும்.  அதே நேரத்தில் பொழுதுபோக்கு வசதிகளுக்கான செலவு அதிகரிக்கும். இதன் காரணமாக  தனிநபரின் செலவு அதிகரிக்கும்.
பொழுதுபோக்கு சாதனங்களான செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் இன்ஷூரன்ஸ்  பாலிசி,  சொகுசு ஹோட்டல், சொகுசு போக்குவரத்து, கட்டுமான தொழில், அழகு நிலையம், அழகு சாதன பொருட்கள்,   பொழுது போக்கு பூங்கா,  கல்விக் கட்டணம் போன்றவற்றுக்கு தற்போது நாம் செலுத்தி வரும் 14.5 சதவிகித வரி இனிமேல் 17 – 18%மாக அதிகரிக்கும் என தெரிகிறது.
 முதியோர்கள் பாதிப்பு?
இந்த வரி விதிப்பினால் முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக பென்ஷன் வாங்குபவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள்  என நம்பப்படுகிறது.  இவர்களுக்க வேறு வருமானம் இல்லாத நிலையில், இவர்களின்  தேவைக்காக பயன்படுத்தும்  போக்குவரத்து, உணவு, செல்போன்,  இன்ஷூரன்ஸ்  போன்றவற்றிற்காக அதிகம் செலவு செய்யும் நிலை ஏற்படலாம். இதனால் முதியோர்களுக்கு இந்த வரி விதிப்பு பாதகமானதாகவே அமையும் என தெரிகிறது.
பொதுவாக ஜிஎஸ்டி வரி எனப்படுவது, சிஜிஎஸ்டி (Central GST), எஸ்ஜிஎஸ்டி (State GST), ஐஜிஎஸ்டி (Integrated GST) என மூன்று வகையாக  பிரிக்கப்படும்.
இந்த ஒற்றை வரி விதிப்பு முறையினால் பொருள்களின் விலை உடனடியாக குறையும் என எதிர்பார்க்க முடியாது. குறைந்தது ஒரு வருட காலமாவது ஆகும்.
அதிமுக எதிர்ப்பது ஏன்? மாநில அரசுகளின் வருமானம்?
ஒவ்வொரு மாநில அரசுக்கும், பெரும்பாலான வருமானம் வரி விதிப்பின் மூலமாகத்தான் கிடைக்கிறது. மாநில அரசுகள்  வரிகளை  நம்பிதான்  மாநில வளர்ச்சி பணிகளை செய்கிறது.  தற்போது,  சேவை வரி, விற்பனை வரி, வாட் வரியின் மூலமாக மாநிலங்களுக்கு வருமானம் வந்துகொண்டு இருக்கிறது.
ஜிஎஸ்டி அமல்படுத்தினால், மாநிலங்களுக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரி வருமானம் கிடைக்காது. ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் வரியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கப்படும். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் என்பதால்  அதிமுக இந்த மசோதாவை  எதிர்ப்பதாக சொல்கிறது.
ஆனால் தமிழகத்தை சேர்ந்த  திமுக எம்.பி.க்கள் நால்வர் (கனிமொழி, திருச்சி சிவா, இளங்கோவன், ஆலந்தூர் பாரதி) இந்த மசோதாவை  ஆதரித்து வாக்களித்தனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட CPI கட்சியின் டி ராஜா, மற்றும் டி கே ரங்கராஜன் (CPM) ஆகியோரும் ஆதரித்து வாக்களித்தனர்.
ஆனால், மத்திய அரசோ, மாநிலங்களின் வருமான வரி இழப்பை இழப்பை சரிக்கட்டும் வகையில் குறிப்பிட்ட அளவு தொகையை வழங்கப்படும் என சொல்கிறது.
அன்றாட வீட்டு உபயோகப்பொருட்களான காய்கறிகள், பால், தயிர், பழங்கள் போன்றவற்றுக்கும் இந்த வரி விதிப்பு கிடையாது என்பது சற்றே ஆறுதல் தரும் விசயம்.
பெட்ரோல், டீசலுக்கான வரி விதிப்பு மாநில அரசுகளே செயல்படுத்தும். அதுபோல் மதுபானங்கள், புகையிலை ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. அதற்கு பதிலாக  வேறு  வகையான வரி விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பினால் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் உருவாகும் என நம்பப்படுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.