பொதுவாய் உயரமான மலைப்பகுதிகளில் குளிர் அதிகமாக இருக்கும் . அங்கே புலிகளைக் காண முடியாது.
ஆனால், சீனா திபெத் எல்லையோரங்களில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் கரடுமுரடான மலைகளைக் கொண்ட மலைப்பகுதியில் 12,000 அடிகள் உயரத்தில் புலி ஒன்று காமிராவில் பதிவாகியுள்ளது.
இது சுற்றுச் சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மற்றொரு குழப்பத்தின் உதாரணம் இது எனக் கருத்து தெரிவித்துள்ளனர் இயற்கை ஆர்வலர்கள்.
வழக்கத்திற்கு மாறாக இமயமலையில் 12,000 அடி உயரத்தில் ஒரு ராயல் பெங்கால் புலியை வன அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
ஒரு மூத்த வனஅதிகாரி கூறுகையில், ” பொதுவாக புலிகள் 3,000-4,000 அடி- உயரத்தில் வாழும் விலங்கு . ஆனால் முதன்முறையாகச் உத்தரகண்ட்டில் உள்ள விலங்கு கூட்டத்திற்கு பன்முகத்தன்மை சேர்க்கும் விதமாகத் தற்போது புலிகள் 12,000 அடி உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், வன அதிகாரி (பித்தோராகர்) ஐபி சிங், ” இந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, அஸ்கோட் வனவிலங்கு சரணாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கேமராவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு புகைப்படம்மூலம் புலி உள்ளது உருதிசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
“பொதுவாக, பனிச்சிறுத்தைகளைப் போன்ற இனங்களைத் தான் 12,000 அடிமேல் உயரமான இடங்களில் காண முடியும்.” என்றும் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் குமாவுன் நிர்வாகப் பிரிவில் உள்ள இந்தச் சரணாலயம் பித்தோராக்க்ல் இருந்து 55 கி.மீ., தூரத்தில் உள்ளது.
இந்தச் சரணாலயம், 2,000 அடி மற்றும் 6,900 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இங்குக் கஸ்தூரி மான் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளது.
அதன் 600 சதுர கி.மீ. காட்டில் சிறுத்தை, காட்டுப் பூனை, புனுகு பூனை, மான் பழுப்பு கரடி உள்ளன.
ஒரு 2014 தரவு கணக்கின்படி இந்தியாவின் தேசிய விலங்கான ராயல் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை 2,226 ஆகும். அரசின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால் நான்கு ஆண்டுகளில் 30% உயர்ந்துள்ளது. இந்தியாவில் கர்நாடகாவில் உள்ள அதிகப்பட்ச எண்ணிக்கையான 406 புலிகளை அடுத்து உத்தரகாண்டில் 340 புலிகள் உள்ளது.
ஆய்வாளர்கள் கருத்து:
விஞ்ஞானிகள் 12,000 அடி உயரத்தில் புலி உள்ளது உலக வெப்பமயமாதலின் ஒரு பின் விளைவு என்று கருதுகின்றனர்.
டேராடூனில் உள்ள வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் இமாலயன் ஜியாலஜி சேர்ந்த டிபி டோபல் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, ” புலிகளால் 12,000 அடி உயரத்தில் வசிக்க முடிகின்றதெனில் அங்கு வெப்பம் நிலவுவதையே காட்டுகின்றது. இது ஒரு நல்ல செய்தியல்ல. உலகம் வெப்பமயம் ஆவதை இது குறிக்கின்றது” என்றார்.