கபாலி படத்தை அடுத்து மலேசியாவில் நடந்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலேசியர்களிடையே கள்ள துப்பாக்கிகள் மிகச் சரளமாக புழங்குகின்றன.
ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்வதும் சகஜமாய் நிகழ்ந்து வருகின்றது.
சிலர் கபாலி படம் தான் சமீபத்திய துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு காரணமென்று குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில், மலேசியாவில் பரவும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு என்ன காரணம் என்று தெரிந்துக் கொள்வோம்.
மலேசிய எல்லையில் தாய்லாந்து கடத்தல்காரர்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு துப்பாக்கிகளை விற்று வருவது மலேசியாவில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்க காரணமாகவுள்ளது.
வெறும் 165 ரூபாயிலிருந்து 1.25 லட்சம்வரை துப்பாக்கிகள் சர்வசாதாரணமாக மலேசியாவில் கிடைக்கின்றன.
மலேசிய முன்னாள் குற்றவாளிகளின் அறிமுகம் கிடைத்தால் போதும், மலேசிய- தாய்லாந்து எல்லைப்பகுதியில் உள்ள சுங்கைகோலோக்கில் சட்டவிரோத ஆயுத விற்பனையாளர்களை எளிதில்தொடர்புகொள்ள முடியும்.
கடந்த ஐந்து வருடங்களில் குறந்தப் பட்சம் 5000 ரூபாயாய் இருந்த துப்பாக்கியின் விலை, தற்போது வெறும் 165 ரூபாயாகக் குறைந்துள்ளது.
“சீன துப்பாக்கிகளைச் சுங்கை கோலோக் வழியாக மலேசியாவிற்குள் கடத்த வெறும் 165 ரூபாய் போதும்”என ஒரு முன்னாள் குற்றவாளி தெரிவித்தார்.
முன்பெல்லாம், ஒரே துப்பாக்கியைப் பல்வேறு குழுக்கள் பங்கிட்டுப் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போதைய நிலையில், ஒவ்வொரு குற்றவாளியும் ஒரு துப்பாக்கி வைத்துக் கொண்டு சுற்றுகின்றனர்.
மலேசிய அரசு, எல்லையில் பாதுகாப்பை அதிகரித்து, துப்பாக்கி கடத்தலை மட்டுப்படுத்தினால் மட்டுமே மலேசியாவில் தினம் தினம் ரத்தம் சிந்தப்படுவது தடுக்கப்படும்.