அங்காரா:
துருக்கி ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ராணுவ புரட்சி வெடித்தது. ராணுவத்தின் ஒரு பிரிவினர்  புரட்சி செய்து ஆட்சியை பிடிக்க முயன்றனர்.  இதை எதிர்த்து ராணுவத்தின் மற்றொரு பிரிவினர் மற்றும் போலீசார் அரசு ஆதரவாக போராடினர்.  ராணுவ ஆட்சியை கொண்டு வர முயன்ற ராணுவ புரட்சியாளர்கள், நகரின் முக்கிய இடங்களில் குண்டுகளை வெடித்தனர். எப்-16 போர் விமானத்தை கடத்திய ராணுவ புரட்சியாளர்களில்  ஒருவன், வானில் பறந்தபடி அங்காரா நகரில் தாக்குதல் நடத்தினான்.
1-turkey
ராணுவ புரட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்களும் களத்தில் குதித்து ராணுவ  ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிராயுதபாணியாக எதிர்த்து நின்றனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். ஆனாலும், ராணுவ டேங்குகள் முன்பு படுத்தும், கூட்டம் கூட்டமாக ராணுவ புரட்சியாளர்களை எதிர்த்தும்  மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். ஒருபுறம் மக்களின் எதிர்ப்பையும், மறுபுறம் அரசு படைகளின் தாக்குதல்களையும் சமாளிக்க முடியாத ராணுவ  புரட்சியாளர்கள் 5 மணி நேரத்துக்கு பிறகு சரணடைந்தனர்.
ராணுவ புரட்சியை எதிர்த்து போராடிய 41 போலீசார் உட்பட 190 பொதுமக்கள் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,500 பேர்  காயமடைந்துள்ளனர். மேலும், ராணுவ புரட்சியாளர்கள் 104 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதை  தொடர்ந்து, ராணுவ புரட்சியாளர்கள் சுமார் 3,000 பேர் சரணடைந்தனர். பல இடங்களில் நடுரோட்டிலேயே பொதுமக்கள் அவர்களை தாக்கிய சம்பவங்களும்  நடந்தன. பல புரட்சியாளர்கள் தங்கள் ராணுவ சீருடை மற்றும் ஆயுதங்களை நடுரோட்டிலேயே போட்டு விட்டு தலைமறைவாகினர்.
2-turkey
துருக்கியின் நிலைமை சீரான பிறகு, விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள சென்ற  இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என  இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது குறித்து அதிபர் எர்டோகன் அளித்த பேட்டியில், ‘ராணுவ புரட்சிக்கு காரணமானவர்கள் பழி தீர்க்கப்படுவார்கள். பலரின்  உயிரை பறித்ததற்காக, இதில் காரணமானவர்கள் கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்றார்.