யாழ்ப்பாணம்:
தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக கூறி, இலங்கை வடக்கு மாகாண மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து பேசிய மன்னார் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் முகமது ஆலம், “இரட்டை மடி வலையைக்கொண்டு இலங்கைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கிறார்கள். இதனால் மீன் இனமே அருகிவிடும் அபாயம் இருக்கிறது. இதைத் தடுக்கக்கோரியே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பழைய முறையில் மீன் பிடிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. மேலும் நாங்கள் தமிழக மக்களுக்கோ எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம்.
அதோடு, இரட்டை மடி வலையை அனுமதிப்பது தொடர்பாக இலங்கை வடக்கு மாகாண அரசு, இலங்கை அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்பினர் கலந்துகொண்டார்கள்.