ராமண்ணா வியூவ்ஸ்:
சென்னையில் இருந்து கிழக்குகடற்கரை சாலை வழியே பாண்டிச்சேரி செல்வது அற்புதமான அனுபவம். அதுவும் காலை நேரம் பயணம், சொர்க்கம்.
கடற்கரை ஓரமாகவே நீளும் சாலை. நம்முடனே ஓடி வரும் அழகு கடல், கரை.
பாண்டிச்சேரி நண்பன் செல்வா, நீண்ட நாட்களாகவே “இந்தப் பக்கம் ஒரு வீக் எண்ட் ட்ரிப் வாங்க… கொண்டாடிடலாம்” என்று நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தான். வருவதாய் வாக்கு கொடுத்தாலும், திடீர் வேலைகளால் புரோகிராம் தட்டிக்கொண்டே போனது… இன்று கிளம்பியாயிற்று.
ஜாகீரின் டிரைவிங்கில் ஆடி கார் 90ல் பறந்தது. பக்கத்து சீட்டில் நான். பின்னால், .சேகர், குமரேசன்.
அப்போது, செல்வாவிடமிருந்து ஒரு வாட்ஸ் அப் மெஸேஜ்.
“வர்றதா சொல்லிட்டு வராம போறதே உங்க வழக்கமா போச்சு. இந்த முறையும் அப்படி நடந்தா…” என்று வார்த்தைகள் மின்னின.. அரிவாள் படத்துடன்!
“அடப்பாவி.. இதுக்கும் அரிவாளா” என்றபடியே, அந்த வாட்ஸ்அப் மெஸேஜை, பின்சீட்டில் இருந்த சேகரிடம் காண்பித்தேன்.
“என்ன செய்ய.. எங்க பாண்டிச்சேரியும் இப்போ வன்முறை நகரமா ஆயிடுச்சு” என்றான் ஆதங்கத்துடன். அவனும் பாண்டிச்சேரிதான். பிஸினஸ் காரணமாக சென்னையில் செட்டில் ஆகிவிட்டான்.
நான், “ஜாலிக்காக அரிவாள் படம் அனுப்பியிருக்கான். அதுக்கு ஏன் சீரியஸ் ஆகிறே” என்றேன்.
சேகர், “இந்த அரிவாள் படத்தை பார்த்தவுடனே எனக்கு வேறு ஞாபகம் வந்துடுச்சு. தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டி கூறுபோட்டுவிட்டான் ஒருத்தன்..” என்றான்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த ஜாகீர், “சென்னை சுவாதியைத்தானே சொல்றே..” என்றான்.
சேகர், “இல்லே.. இது பாண்டிச்சேரி சம்பவம்” என்றான் ஆதங்கம் குறையாமல்.
ஓட்டிக்கொண்டிருந்த வண்டியை சட்டென நிறுத்தினான் ஜாகீர். வண்டி குலுங்கி நின்றது.
“என்னது… இன்னொரு சுவாதியா…” ஜாகீரோடு சேர்ந்து நானும் கேட்டேன்.
தலையசைத்து மறுத்த சேகர், சொல்லத்துவங்கினான்:
“பாண்டிச்சேரி கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி கஜோல். மாலை நேரம், கல்லூரி முடிந்து வெளியே வந்த போது, மோட்டார் பைக்கில் வந்து மறித்திருக்கிறார்கள் இருவர். அவர்களில் ஒருவன், மறைத்துவைத்திருந்த அரிவாளால் காஜலை கண்டம் துண்டமாக வெட்டிப்போட்டான். கஜோலுக்கு கழுத்து, தோள்பட்டை, முதுகு என்று ஆழமான வெட்டுக்கள். கதறித் துடித்து கீழை விழுந்துவிட்டார் மாணவி கஜோல்.!”
“அய்யோ.. அப்புறம் என்னாச்சு?”
“ அங்கிருந்த சக மாணவர்கள், பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கஜோலை துக்கிக்கொண்டு ஓடினார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தார்கள். பிழைத்துக்கொண்டார்” என்றான் சேகர்.
“ஏன் வெட்டினானாம்..”
“அதான் சொன்னேனே.. ஒரு தலைக் காதல் என்று. போலீஸ் விசாரணையில் சுகுமார் என்பவன் பிடிபட்டான். செஞ்சி அருகில் இருக்கும் துத்திப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். மாணவி கஜோலின் வீடு இருக்கும் அதே பகுதியில் அவனது மாமா வீடு. அங்கு தங்கி ஏதோ வேலை பார்த்து வந்திருக்கிறான்.
கஜோலை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளை நான் காதலித்தேன். பலமுறை என் காதலை வெளிப்படுத்தியும் அவள் ஏற்கவில்லை. எனக்கு கிடைக்காத அவள், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது. அதனால்தான் வெட்டினேன்” என்று வாக்குமூலம் கொடுத்தான் அந்த கொடூரன்!” – சேகர் சொல்லி முடிக்க…
“சுவாதி கொலை நடந்த சுவடு கூட மறையவில்லை.. அதற்குள் இன்னொரு ஆணாதிக்க தாக்குதலா” என்று வருத்தத்துடன் கேட்டான் ஜாகீர்.
அதற்கு சேகர், “இல்லை.. இந்த சம்பவம் கடந்த 2015ம் வருடம் ஜூன் மாதம் நடந்தது. அதாது சுவாதி கொலைக்கு ஒரு வருடம் முன்பு..” என்று சேகர் சொல்ல.. காரை ஸ்டார்ட் செய்தான் ஜாகீர்.
சேகர் தொடர்ந்தான்:
“ஒரு தலை காதல் காரமணாக காஜல் கொடூரமாக வெட்டப்பட்டது குறித்து எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.
சமீபத்தில் நடந்த சுவாதி கொலை கடுமையாக கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் இதே போல காஜல் மீதான தாக்குதல் ஏன் பத்திரிகை, டிவியிலோ.. அல்லது பேஸ்புக் மாதிரி சமூகவலைதங்களிலோ முக்கியத்துவம் பெறவில்லை? சுவாதி கொலைக்குப்பிறகு, காதல், வன்முறை, பெண்கள் பாதுகாப்பு என்று நாளும் பொழுதும் பேசுபவர்கள் கவனத்தை காஜல் மீதான தாக்குதல் ஏன் ஈர்க்கவில்லை. அப்போதே இவை குறித்து பேசியிருந்தால், சமூகத்தை சிந்திக்க வைத்திருந்தால் சுவாதி கொலைகூட தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என்னவோ?” என்று நிறுத்திய சேகர், மீண்டும் பேசத்துவங்கினான்:
“காஜல் மீதான தாக்குதல் பொதுவெளியில் கவனத்துக்கு வராமல் போனது குறித்து எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.
- காஜல், சுவாதி இருவர் தாக்கப்பட்ட காரணமும், விதமும் ஒரே மாதிரியானவைதான். காஜல், நல்லவேளையாக பிழைத்துக்கொண்டார். அதனாலேயே நாம் அந்த கொடூர சம்பவத்தை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையா? தாக்குதல் என்று நடந்தால், உயிர் போக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம் அடிமனதில் இருக்கிறதோ? அப்படி நடக்காதபோது, ஒரு ஏமாற்றத்துடன் அந்த சம்பவத்தை கடந்துபோகிறோமா?
- நல்லதோ கெட்டதோ.. சென்னையில் நடந்தால் மட்டும்தான் மீடியா உட்பட அனைவரின் கவனமும் திரும்புமா?
- சுவாதி கொலை நடந்தபோது, அந்த தகவல் தெரிந்த அனைவருமே பதறினார்கள். அந்த நேரம் யாரும் எதிர்பாராத வகையில் முதன் முதலாக சிலர் சுவாதிக்கு சாதி முத்திரை குத்தினார்கள். “பிராமணப் பெண் படுகொலை” என்று போஸ்டர் ஒட்டினார்கள். ஊடகத்திலும் அதிகார மட்டத்தில் செல்வாக்கு மிக்க அச் சாதியினரால் சுவாதி படுகொலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதா? அப்படியனால் இது போன்ற சம்பவங்களிலும் தாக்கப்பட்டவர் எந்த சாதி என்பதற்கு ஏற்பத்தான் அந்த விசயம் பார்க்கப்படுமா?
- பாண்டிச்சேரியில் வெட்டப்பட காஜல் கல்லூரி மாணவி. சென்னை சுவாதி ஐ.டி. நிறுவன ஊழியர். ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பற்றி இருக்கும் “கவர்ச்சி பிம்பம்” காரணமாக, அவரது கொலை பற்றி அறியும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டதா?” – என்று கேள்விகளை அடுக்கிய சேகர், சற்று இடைவெளிவிட்டு. “இனி இருப்பது ஒரே கேள்விதான். சுவாதி கொலைக்கு பிறகான சம்பவமா காஜல் மீதான தாக்குல் என்று பதறிப்போய் கேட்டீர்கள். இது ஒரு வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம் என்றவுடன், “அப்படியா” என்கிற மனோபாவம் நமக்கு வந்துவிடுகிறதே.. ஒரு வருடம் முன்பு நடந்திருந்தால் அது கொடூரம் என்றில்லாமல் போய்விடுமா… நமது மனது புதிது புதிதாக பரபரப்பு செய்திகளைத் தேடுகிறதா” – கேட்டு நிறுத்தினான் சேகர்.
இந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? கார் ஓடிக்கொண்டிருக்க.. காரினுள் அமைதி நலவியது