படத்தகவல்:
“பர்மா’ பட இயக்குநர் தரணிதரனின் அடுத்த படம்.  சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் பத்தாவது படம். அப்பா சத்யராஜ் மகன் சிபிராஜ் இணைந்து நடிக்கும் ஐந்தாவது படம். “காமடி ப்ளஸ் திகில் படம்” என்று விளம்பரம் செய்யப்பட்டதால், எதிர்பார்க்க வைத்தது.
கதை:
அயன்புரம் கிராமத்தில் புராதண மாளிகையில்  “ஜாக்சன் துரை” என்கிற வெள்ளைக்கார பேய் “வசிப்பதாக” ஊரே பயந்து நடுங்குகிறது.  சிலர் பேயால் செத்தும் போகிறார்கள். ஆகவே உண்மை என்னவென்று கண்டறிய  போலீஸ் எஸ்.ஐ. சிபிராஜ் அந்த ஊருக்கு வருகிறார்.
வந்த இடத்தில் ஊர் பிரசிடண்ட் மகளுடன் காதலாக.. “அந்த பேய் பங்களாவில் ஒருவாரம் தங்கி வந்தால்தான் திருமணம்” என்கிறார் பிரசிடண்ட். சிபிராஜின் காதலிக்காக செல்லத் தயாராகிறார். காதலியின் முறைப்பையனும் பெண் கேட்க.. அவருக்கும் அதே நிபந்தனையை விதிக்கிறார் பிரசிடண்ட். இருவரும் பேய் பங்களாவில் தங்குவதற்காக சேர்ந்து செல்கிறார்கள்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
download (1)
 
நடிப்பு:
ஓவர் பில்ட் அப் கொடுக்கும் உதார் பார்ட்டியாக வருகிறார் சிபிராஜ். போலீஸ் எஸ்.ஐ. ஆன அவர், அந்த கிராமத்துக்கு வந்ததும் “சி.பி.ஐ”யில் இருந்து வந்திருக்கேன்” என்று உதார் விடுவது ஒரு “உதார்”ணம். இதுவரை நடித்த படத்திலேயே கொஞ்சம் காமெடி கலந்து இந்த ரோலில்தான் சரியாக செட் ஆகியிருக்கிறார் சிபி.   பயம், காதல், ஆக்சன் என்று நன்றாகவே நடித்திருக்கிறார்.
சிபிராஜூடன் பேய் பங்களா போகும் முறை மாமன் கருணாகரன் வழக்கம்போல சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோயின் பிந்துமாதவி அழகாக வந்துபோகிறார்.  சிபிராஜை கலாய்க்கும் யோகிபாபு, சிரிக் வைக்கிறார். ‘பேய்க்கே பேப்பர் போட்டவன் நானா தான் இருக்கும்’ என்று பன்ச் அடிப்பது ரசிக்க வைக்கிறது.
எந்த வேடத்தில் நடித்தாலும் “பேய் நடிப்புய்யா” என்று ரசிக்கவைப்பவர் சத்யராஜ். இந்தப் படத்தில் பேயாகவே வந்து படுத்துகிறார். வழக்கமாக ரசிக்க வைக்கும் மொட்டை ராஜேந்திரனும் எரிச்சலூட்டுகிறார். இவர்களைச் சொல்லி தப்பில்லை… பேய்ப்படமா காமெடிப்படமா, இரண்டும் கலந்ததா  என்கிற முடிவுக்கு வராமல் தவித்திருக்கிறார் இயக்குநர். அதில் இந்த இருவரின் நடிப்பும் வீணாகிப்போய்விட்டது.
யுவாவின் ஒளிப்பதிவு முழுக்க பேய் வண்ணம்.  டல்லான ஒளியில் அந்த அயன்புரம் கிராமத்தை அற்புதமாக காட்டியிருக்கிறார். பேய் பங்களா காட்சிகளும் சிறப்பு. சித்தார்த் விபின் இசை சில சமயம் நடுங்க வைக்கிறது. பல இடங்களில் சர்கஸ் இசை போல சொதப்புகிறது. இன்னும் பல இடங்களில் ஒரே இரைச்சல்.
இயக்கம்:  
இருளான அந்த சாலையில் சீறிவரும் கார். வாகனத்தை ஓட்டுபவரும் அருகில் இருப்பவரும் பதட்டமாய் பேசிக்கொள்வது என்று படம் ஆரம்பிக்கும்போதே “பக் பக்”தான். இந்த பக்பக் இடைவேளைவரை தொடர்கிறது.
அதன் பிறகு சொதப்பல். “வெள்ளைக்கார பேய்”, “சுதந்திர போராட்ட பேய்” என்று டார்ச்சர். சுதந்திர போராட்டத்தை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பேய் படங்களுக்கான களம் எவ்வளவோ இருக்கிறது. சுந்திரப்போராட்ட விசயம்தானா கிடைத்தது.
அதுவும் பேயின் ஒரு தரப்போடு சிபிராஜூம் கருணாகரனும் கூட்டணி சேர்ந்து இன்னொரு தரப்பை சுட்டுக்கொல்கிறார்களாம். அந்த பேய்களும் செத்துப்போகின்றதாம். பேய் படங்களுக்கு லாஜிக் தேவையில்லைதான். அதற்காக இப்படியா?
தரணிதரன் திரைக்கதையில் பெரிதாக சொதப்பி இருக்கிறார். அயன்புரம் ஊரை சரியாக காட்சிப்படுத்தவில்லை. ஃபிளாஷ்பேக் எந்த வித அழுத்தத்தையும் தராமல், பின்மண்டையில் ஓங்கி அடித்து தலை தெறிக்க ஓட வைக்கிறது.
ரிசல்ட்:
சத்யராஜின் சொந்தப்படமாம். சொந்தக்காசில் சூனியம்!