நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய “உத்தா பஞ்சாப்” திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகிறது.
பஞ்சாபில் நடக்கும் போதை மருந்துக் கடத்தல் தொழிலை பின்னணியாகக் “  உட்தா பஞ்சாப்”  என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்தப்  படத்தை ஆய்வு செய்த தணிக்கை வாரியம், அதில் 13 காட்சிகளை நீக்குமாறு பரிந்துரை செய்தது.
பஞ்சாப் மாநிலத்தை தற்போது ஆளும் அகாலிதளம் – பாஜக கூட்டணி ஆட்சியினரே, இந்தப் படத்தின் தடைக்குப் பின்னால் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.  தணிக்கை வாரியத் தலைவர் நிஹலானி,  ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சொல்லப்பட்டது.  இது இந்தியா முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
a
இதற்கிடையே சென்சார்போர்டின் உத்தரவை எதிர்த்து, திரைப்படத் தயாரிப்புக் குழு, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “திரைப்படத்தில் காட்சிகளை நீக்குவதற்கு தணிக்கை வாரியத்துக்கு அதிகாரமில்லை; சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும்’ என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தர்மாதிகாரி, ஷாலினி பன்சால்கர் ஜோஷி ஆகியோர் முன்னிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
“திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தயாரிப்புக் குழுவுக்கு அறிவுறுத்த முடியும். காட்சிகளை நீக்குவதற்கு தணிக்கை வாரியத்துக்கு அதிகாரமில்லை. திரையரங்குகளுக்கு திரைப்படம் பார்க்க வரும் மக்கள் பக்குவமடைந்தவர்கள். ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமா  கூடாதா  என்பதைத் தேர்வு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
மேலும், படைப்புச் சுதந்திரம் தேவையின்றி நசுக்கப்படக் கூடாது”  என்று தெரிவித்தனர்.
அப்போது, தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “இந்தத் திரைப்படத்தின் பாடல் வரிகளிலும், வசனங்களிலும் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன;  இது ஆட்சேபத்துக்குரியது”  என்று வாதிட்டார்.
நீண்ட நேரம் நடைபெற்ற வாதத்துக்குப் பிறகு, திரைப்படத்தில் ஒரு காட்சியை நீக்குமாறும், சில காட்சிகளில் திருத்தம் செய்யுமாறும் நீதிபதிகள் தெரிவித்ததை திரைப்படத் தயாரிப்புக் குழு ஏற்றுக் கொண்டது.
மேலும், திரைப்படத்தில் ஆபாச வார்த்தைகள் இடம்பெறும்போது, பீப் ஒலி வைக்கவும் திரைப்படக் குழு ஒப்புக் கொண்டது.  இதையடுத்து, ஏ சான்றிதழுடன் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளிக்குமாறு திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள்.