சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு, ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியதுதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ., ராமசாமியும், கொறடாவாக விளவன்கோடு எம்.எல்.ஏ., விஜயதாரணியும் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டனர். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், “தமிழகத்தில் திமுக, அதிமுக.,வுக்கு அடுத்த பெரிய இயக்கமாக காங்கிரஸ் உருவெடுத்து இருக்கிறது. தமிழக சட்டசபையில் மக்களின் பிரச்சினைகளுக்காக திமுக.,வுடன் இணைந்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும். தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியதை போன்று ஆவின் பால் விலையை ஜெயலலிதா உடனடியாக குறைக்க வேண்டும். அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது சரியானது அல்ல.
தேர்தல் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது தவறு. இருந்தாலும், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுத்ததும், ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததுமே திமுக-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காரணம்” என்றார். பிறகு சீரியஸாக, ” காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறாததற்கு, திமுக.,வினர் சரியாக வேலை செய்யாததே காரணம் என்று திமுக.,வினரே ஒப்புக் கொண்டுள்ளனர்” என்று இளங்கோவன் தெரிவித்தார்.