முன்னாள் ஹிமாச்சபிரதேஷ் முதல்வரின் மகன் அனுராக் தாக்கூர், அரசிடம் அனுகூலங்களைப் பெற்றபின் ஹிமாச்சல் கிரிக்கெட் அமைப்பை ஒரு நிறுவனமாக மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட விவரத்தை காண்போம்…
சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்னர் , ஒரு உறையவைக்கும் குளிர்காலத்தில், நவம்பர் 23, 2000 அன்று காலை, ஜம்முவில் உள்ள தாவி நதிக்கரையோரம் உள்ள மவுலானா ஆசாத் நினைவு ஸ்டேடியத்தில் ஹிமாச்சலப் பிரதேச ரஞ்சி கிரிக்கெட் அணி, 2000-01 ரஞ்சி கோப்பை பருவத்தின் ஐந்தாவது போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியை எதிர்கொண்டது. அந்தத்தொடரில், அதற்கு முன் ஹிமாச்சல் அணி இரண்டு போட்டிகளில் தோற்று இரண்டு போட்டிகளைச் சமன் செய்திருந்தது.
அந்தப் போட்டியில் ரஞ்சி போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய அனுராக் தாக்கூர், ஒரு மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு நிமிடங்களில் ஏழு பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆனார்.பந்துவீச்சில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆனால் அவர் அந்தப் போட்டியில் விளையாடியது முக்கிய இரண்டு காரணங்களுக்காகக் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
இந்திய கிரிக்கெட்டில் மதிப்புமிக்க உள்நாட்டு முதல்ரதர கிரிக்கெட் போட்டியான ரஞ்சிக்கோப்பையின் 80 ஆண்டு வரலாற்றில், ஒரு ரஞ்சிப்போட்டியில் முதன்முறையாக அறிமுகமாகும் வீரர் ஒருவர் அந்த மாநில அணிக்குக் கேப்டனாக அறிவித்துக் கொண்டது இது தான் முதன்முறை.
அதுமட்டுமின்றி, ஒரு மாநில அளவிலான தேர்வுக் குழுத் தலைவர் தன்னைத் தானே தான் நிர்வகிக்கும் கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்துக் கொண்டது மட்டுமின்றி அணியின் கேப்டன் பொறுப்புக்கிற்கும் தன்னையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
ஒருவர் ரஞ்ஜிக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட மாநில அணிக்குத் தேர்வு செய்யப்பட தேவையான தகுதியான குறைந்தப்பட்சம் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்கிற விதிமுறையைப் பின்பற்றவில்லை. அவர் எந்தத் தகுதி தேர்வுகளிலும் கலந்துக்கொண்டதில்லை.
இவர் இவ்வாறு தேர்வு செய்யப்படும் போது முதலமைச்சராய் இருந்தது பிரேம் குமார் துமால். இவர் அனுராக் தாகூரின் தந்தை ஆவார்.
இவ்வாறு தன்னைதானே தேர்வு செய்து விளையாடியது குறித்து விளக்கம் அளித்த அனுராக் தாக்கூர், அப்போதைய அணி மிகவும் மோசமாக விளையாடி வந்ததால் அணிக்குப் புது உத்வேகம் கொடுக்கத் தாம் விளையாடியதாகத் தெரிவித்தார். மேலும் தாம் 16-வயது மற்றும் 19-வயதிற்குட்பட்டொருக்கான ஆட்டங்களில் சிறந்த அனுபவம் இருந்ததால் தேர்வுக்குழுவினர் தம்மை ஆடக் கேட்டுகொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் அனுராக் தாகூர் ஹிமாச்சல் மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
இவ்வாறு முறைகேடாக ரஞ்சிப்போட்டியில் விளையாடிய அனுபவத்தை அடைப்படையாய்க் கொண்டு, அதற்கு அடுத்த வருடம், ஹிமாச்சலிலிருந்து ஒரு தேசிய தேர்வுகுழுவிற்கு ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வந்தது. அதற்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ யின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு, தன்னைதானே அந்தப் பதவிக்கு முன்மொழிந்துக் கொண்டார் அனுராக் தாகூர். ஒரு ரன் கூட அடிக்காத ஒரே ஒரு ரஞ்சி ஆட்ட அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்த மூன்றாண்டுகளுக்கு அனுராக் தாகூர் தேசிய இளையோர் அணிக்குத் தேர்வுக்குழு உறுப்பினராய்த் திகழ்ந்தார். (அதன் பிறகு குறைந்தப்பட்ச அனுபவம் 25 ரஞ்சிப் போட்டிகளாக அதிகரித்தது தனிக்கதை.)
அவரது ரஞ்சி ஆட்டம் போலவே அவரது தலைமையின் கீழ் ஹிமாச்சல் கிரிக்கெட் அமைப்பு எப்படி மோசமாக உள்ளது என்பதற்கு தரம்ஷாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானம் கட்டியதில் உள்ள ஊழல் புகார்கள், நீதிமன்ற வழக்குகள் ஆகியவை, கிரிக்கெட்டில் அரசியல் பூந்தால் என்னென்ன கெட்ட விழைவுகள் ஏற்படும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் ஆகும்.
இவர்மீது உள்ள புகார்களில் முக்கியமானது ஹிமாச்சல் கிரிக்கெட் அமைப்பின் பெயரில் உத்தரப்பிரதேச அரசு ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கிய பெருவாரியான நிலங்களை முறைகேடாகப் மாற்றினார் என்பதாகும்.
எனினும் தரம்ஷாலவில் கிரிக்கெட் மைதானம் கட்டியதன் மூலம் பி.சி.சி.ஐயில் பிரபலம் அடைந்தார்.
பா.ஜ.கவின் இளம் தலைமுறைத் தலைவர்களில் ஒருவராக அனுராக் பார்க்கப்படுகின்றார்.
ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேசன் என்கிறப் பெயரில் தொண்டு அமைப்பையும், அதே பெயரில் ஒரு கம்பெனியையும் துவங்கி இரண்டிற்கும் தலைவராய் அனுராக் தாகூரே நீடித்து வந்தார்.
அவரது தந்தை முதலமைச்சராக இருக்கும்போது, 2002ஆம் ஆண்டில் 50,000 சதுரமீட்டர் நிலத்தை மாதம் 1 ரூபாய் ஒத்திகைக்கு 99 ஆண்டுகளுக்கு “ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேசன்” தொண்டு அமைப்பின் பெயரில் நிலத்தை வாங்கி அவரது கம்பெனி பயன்படுத்திவருகின்றது.
அவரது தந்தை அந்தக் கம்பெனியின் இயக்குனராக இருந்ததும் சர்ச்சை ஆனது.
(Photo credit: SAJJAD HUSSAIN/AFP/Getty Images)
இவர் பி.சி.சி.ஐ.யின் தலைவராக தேர்ந்தெதுக்கப்பட்ட பிறகு, அவ்ரப் பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.
பல தில்லாலங்கடி வேலைகளைப் பார்த்துக் குறுக்கு வழியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகி உள்ள அனுராக் தாகூர் ” கிரிக்கெட்டில் ஊழலை, அரசியல் தலையீட்டை ஒழிப்பது குறித்து லூத்ரா கமிட்டியின் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என்பது தமிழகத்தில் ராஜேஷ் லக்கானி “நடுநிலைமையுடன் தேர்தலை நடத்தியதைப் போல் மிகவும் சிறப்பாக இருக்கும். என்ன சரிதானே ?