குமரேசன் (Kumaresan Asak) அவர்களின் முகநூல் பதிவு:
றவுக்காரர்கள்தான், ஆனாலும் நண்பர்களாக உரிமையெடுத்து என்னோடு நெருக்கமாகப் பழகுகிற குடும்பம் அது. தங்களுடைய மகன் சாமி கும்பிட மாட்டேன், சாதி பார்க்க மாட்டேன் என்றெல்லாம் பேசுகிறபோது “உன்னைப் பார்த்துதான் இவனும் கெட்டுப்போயிட்டான்,” என்று சொல்லிக்காட்டுவார்கள். “கெட்டுப்போறதுன்னா என்னா,” என்று நானும் அதையே அன்றைய பேசுபொருளாக்கிவிடுவேன். ஆயினும் இனிமையான நேசத்தையும் சுவையான உணவையும் எனக்குப் பரிமாறுவதில் குறையேதும் வைத்ததில்லை.
ஒரு முக்கியப் பிரச்சனை பற்றிப் பேச வேண்டும் வா என்று அழைத்தார்கள். பையன் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்கள். திருமணச் செய்தியை விடப் பல மடங்கு மகிழ்ச்சியடைந்தவனாக “ஆகா” என்றேன். ஆனால் பெற்றோர் முகங்களில் ஒரு சங்கடமும், பையனின் பார்வையில் ஒரு எதிர்பார்ப்பும் வெளிப்பட்டதைக் கண்டேன்.
“லவ் பண்றதை நாங்க வரவேற்கிறோம். ஆனா…,” என்று இழுத்தான் அப்பன்.
“பிறகென்ன? ஏதாவது சாதி, கீதி…?”
“அதெல்லாம் பிரச்சனையில்லை. சாதி, மதம், பொருளாதாரம்… இதெல்லாம் நாங்க பார்க்கலை.”
“வேறே என்ன சிக்கல்? இப்படி எத்தனை அம்மா அப்பா சொல்வாங்க?…” என்றபடி பையனைப் பார்த்தேன். அவன் “பொறுங்க பொறுங்க,” என்பது போல் புன்னகைத்தான்.
images
“இவன் லவ் பண்ற பொண்ணோட வயசுதான் பிரச்சனை,” என்றாள் அம்மா.
“என்ன, ரொம்பச் சின்னப்பொண்ணா இருக்காளா?”
“இல்லை. இவனை விட மூணு வயசு அதிகம். இதை எப்படி ஏத்துக்கிடறது, சொல்லுங்க…”
மவுன இடைவெளி நேரத்தில் காஃபியைப் பருகி முடித்தோம்.
“இதிலே என்ன இருக்கு? பெரியவங்களா பார்த்து நிச்சயம் பண்ற கல்யாணங்கள்ல பெரும்பாலும் பொண்ணோட வயசு பையனோட வயசை விட குறைவா இருக்கிற மாதிரி பார்த்துக்கிடறாங்க. பையன் நாற்பது வயசைத் தாண்டியிருந்தால் கூட பொண்ணோட வயசு இருபது இருபத்தஞ்சுக்குள்ள இருக்கிறதை உறுதிப்படுத்துறாங்க…”
“காலம் காலமா இப்படித்தானே நடக்குது?”
“ஆமா. ஏன் தெரியுமா? வயசானதுக்கப்புறம் அவன் நடமாட முடியாம படுத்துக்கிடந்தான்னா அவனுக்குக் கை கால் பிடிச்சு விடுறதுக்கும் மத்த பணிவிடைகள் செய்யுறதுக்கும் பொண்ணோட உடம்புல தெம்பு இருக்கணுமேன்னுதான். சம வயசா இருந்து அவளும் முடியாமப் படுத்துட்டா என்ன பண்றதுக்காகத்தான். இதெல்லாம் கூட ஆணாதிக்கப்புத்தியோட ஒரு அம்சம்தான். ஏன், மனைவிக்குக் கணவன் கை கால் பிடிச்சு விடக்கூடாதா? நம்ம பையன் காதலிக்கிற பொண்ணுக்கு இவனை விடக் குறைஞ்ச வயசா இருந்தா நீங்க கவலைப்பட்டிருப்பீங்களா? பொதுவா காதல் பண்ற பசங்களுக்கு சம வயசா இருக்கிறதுக்குத்தான் வாய்ப்பு அதிகம். மத்தபடி காதல் சாதி மதம் பார்த்தோ, பண நிலைமையைப் பார்த்தோ வர்றதில்லைங்கிற மாதிரி, வயசைப் பார்த்தும் வர்றதில்லை. அதுவும் அவங்க விருப்பம்தான். எத்தனையோ தம்பதிகள் இப்படி இருக்காங்க. பெரியவங்க நிச்சயம் பண்ற கல்யாணங்கள்ல கூட எங்கேயாச்சும் இப்படி நடக்கத்தான் செய்யுது. மத்த வேறுபாடையெல்லாம் ஏத்துக்கிட்டீங்க, இதையும் மனமுவந்து ஏத்துக்கிடுங்க.”
பையன் முகத்தில் மலர்ச்சி. இரவு உணவை முடித்துக்கொண்டு, “டேயப்பா, உன் ஆளை அழைச்சிட்டு வந்து எனக்கு அறிமுகப்படுத்தி வை,” என்று சொல்லியபடி புறப்பட்டேன். பெற்றோர் முகங்களில் மாறுபாடு எதுவும் தென்படவில்லை. சில மாற்றங்கள் இதழ் இதழாகத்தான் மொட்டவிழும்.