டெல்லி:
தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 7 மாநிலங்களின் ஆளுநர்கள் விரைவில் மாற்றப்படலாம் என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி மாநிலத்துக்கு முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பெடியை புதிய ஆளுநராக அறிவித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து மேலு ஏழு மாநில ஆளுநர்கள் மாற்றபப்டலாம் என்று டில்லி அரசியல்வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து பேசப்படுவதாவது:
அடுத்த ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது பாஜக. இதற்காகவே அந்த மாநில ஆளுநரை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குஜராத் மாநில முதல்வர் பா.ஜ.க.வின் ஆனந்திபென் படேலை மாற்ற வேண்டும் என்று அக் கட்சிக்குள்ளேயே பலரும் குரல் கொடுத்துவருகிறார்கள். ஆகவே அவரை பஞ்சாப் மாநில ஆளுநராக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பை ஹரியானா மாநில ஆளுநர் கப்தன்சிங் சோலங்கி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். ஆகையால் அனந்தி பென் படேல் பஞ்சாபின் முழு நேர ஆளுநராக நியமிக்கக்கூடும்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கல்யாண்சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பொறுப்பு வகிக்கிறார். அவர் உ.பி. அல்லது வடகிழக்கு மாநிலம் ஒன்றுக்கு மாற்றப்படலாம்.
அதே போல. உத்தரகாண்ட் மாநில ஆளுநர் கே.கே.பால், ராஜஸ்தான் மாநிலத்துக்கும் டெல்லி மாநில முன்னாள் போலீஸ் அதிகாரி பி.எஸ்.பாசி உத்தரகாண்ட் மாநிலத்துக்கும் ஆளுநராக்கப்படுவார்கள்.
மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான சோலி சோரப்ஜியையும் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த போதே, சோரப்ஜியை கர்நாடக ஆளுநராக நியமிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சோரப்ஜி அப்போது அவர் மறுத்துவிட்டார். ஆனால் தற்போது அவர் ஆளுநர் பதவி ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆகவே ஏதாவது ஒரு மாநிலத்துக்கு அவர் ஆளுநராக்கப்படுவார்.
அதே போல தமிழக ஆளுனர் ரோசய்யாவும் மாற்றப்படுவார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி தமிழக ஆளுநராக பதவி ஏற்றார். அவரது ஐந்து ஆண்டு பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது.
இவர் கடந்த காங்கரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர், இப்படி கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை எல்லாம், பாஜக அரசு ஏற்கெனவே மாற்றிவிட்டது. ஆனால் இவர் மட்டும் தப்பித்துவந்தார். இந்த நிலையில் ரோசய்யாவுக்கு பதவி நீடிப்பு அளிக்காமல், அவருக்கு பதிலாக பாஜகவைச் சேர்த மூத்த தலைவர் ஒருவரை தமிழக ஆளுநராக நியமிக்க மத்திய ஆளும் பாஜக அரசுதிட்டமிட்டுள்ளது” – இவ்வாறு டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.