டில்லி:
இஸ்லாமியர்கள் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்கும் நடைமுறையை எதிர்த்து, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீத், உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இஸ்லாமியர்கள் மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாகரத்து செய்யும் ஷரியத் சட்டத்தை எதிர்த்து, ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. விரைவு தபாலில், ‘தலாக்’ சொல்லி விவாகரத்து வழங்கியதை எதிர்த்தும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த வாரம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த நிலையில், அ.தி.மு.க., சார்பில், தமிழக எம்.எல்.ஏ.,வாக இருந்த, பதர் சயீத், ‘தலாக்’ முறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: “நீதிமன்ற தலையீடு இல்லாமல், இஸ்லாமிய ஆண்கள், தன்னிச்சையாக, ‘தலாக்’ கூறி, விவாகரத்து வழங்குகிறார்கள். இதனால், புகுந்த வீட்டில் இருந்து, பெண்கள் வெளியே வீசப்படுகின்றனர்; அவர்களது குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நடைமுறையால், பல பெண்கள் பாதிக்கப்பட்டுகிறார்கள். விவாகரத்துக்கு அங்கீகாரம் வழங்கி சான்றிதழ் அளிக்க, ஹாஜிக்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இது, அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே விவாகரத்து வழங்கப்பட வேண்டும்.
எனவே, இந்த விஷயத்தில் விதிகளை வகுக்க வேண்டும். ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்க வகை செய்யும் ஷரியத் சட்டப் பிரிவுகளை, அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என அறிவிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் பதர் சயீத் கூறியுள்ளார்.