“தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்து போட்டுவிட்டார்” என்று ஆளுங்கட்சியினரும், அரசும் உற்சாகமாக தெரிவித்து வரும் நிலையில், “இந்த கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை” என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து உழவர் உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டனிடம் பேசினோம். அவர் கூறியதாவது:
“அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். இதையடுத்து நகை கடன், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான மத்திய கால கடன், குபேட்டா, டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளுக்கான கடன் என, அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடியாகும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தற்போது கூட்டுறவு பயிர்க்கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். கடன் தள்ளுபடியை எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடனை விட, வங்கிகளில் அதிக கடன் பெற்றிருக்கிறார்கள் என்கிற யதார்த்தத்தை உணர வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பவர்கள் சுமார் 20 சதவிகித விவசாயிகள்தான்.
தவிர இந்த கடன் தள்ளுபடி சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதாவது ஐந்து ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி.
மேலும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற குறுகியகால பயிர்க்கடன்களை, பெரும்பாலான வங்கிகளில் அதன் செயலர்கள், ஏற்கனவே வசூல் செய்துவிட்டனர். மேலும் சிறு, குறு விவசாய கடன் பெற்று திருப்பி செலுத்தாததை, மத்திய கால கடனாக மாற்றி வைத்துள்ளனர். மொத்தத்தில் விவசாய கடன் தள்ளுபடி என்பதே மாயை. விவரம் தெரியாத மக்களிடம், விவசாயிகளுக்கு கடன் எல்லாம் தள்ளுபடியாமே என்கிற தவறான எண்ணத்தையே முதல்வரின் அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. மற்றபடி விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை” என்று குமுறினார் பொங்கலூர் இரா. மணிகண்டன்.
மேலும் அவர் நம்மிடம் கூறியதாவது: “விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்கிறோம் என்று காலம்காலமாக அரசுகள் அறிவித்தபடிதான் இருக்கின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா? இன்னமும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில்தான் விவசாயிகளின் நிலை இருக்கிறது.
இந்த நிலை மாற ஒரே வழி, விவசாய உற்பத்தி பொருளுக்கு உரிய விலை கிடைக்க செய்வதுதான். இது குறித்து ஏற்கெனவே சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. அதை செயல்படுத்தினாலே விவசாயிகள், தள்ளுபடியை எதிர்பார்க்க தேவை இருக்காது” என்று சொல்லி முடித்தார் இரா. மணிகண்டன்.