Tamil_News_large_152821520160524051421_318_219
டோக்கியோ :
‘இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதற்காக, அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கப்போவது இல்லை,” என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.  வியட்நாம் தலைநகர் ஹனோயில், அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங் உள்ளிட்டேரை சந்தித்து பேசினார். அப்போது, சீனாவுடனான, வியட்நாமின் கடல் எல்லை விவகாரம், வியட்நாம் மீதான பொருளாதார தடையை அகற்றுவது உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர்.
இதை தொடர்ந்து ஜப்பான் செல்லும் ஒபாமா, ஹிரோஷிமா நகரில் நடக்கும் பொருளாதாரத்தில் வளர்ந்த, ஜி – -7 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்.
இரண்டாம் உலகப்போரின் போது, , இந்த நகரம் மீது  அமெரிக்கா அணுகுண்டு வீசியதில்  நகரமே அழிந்தது.
அதற்குப் பிறகு பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர், அங்கு செல்வது இதுவே முதன்முறை ஆகும்.
இந்த நிலையில் ‘அணுகுண்டு வீச்சுக்கு, அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, ஜப்பானியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜப்பான் ‘டிவி’ சேனலுக்கு பேட்டியளித்த, ஒபாமா “ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்காது. இதுதொடர்பாக கேள்வி எழுப்புவதும், ஆய்வு செய்வதும் வரலாற்று ஆசிரியர்களின் வேலை.  போர்க் காலங்களின் பதவியில் இருக்கும் தலைவர்கள் அனைத்து வகையான முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள். இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதை, ஒரு அதிபராக என்னால் உணர முடிகிறது” என்று தெரிவித்தார்.
ஒபாமாவின் இந்த கருத்து ஜப்பான் மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.