என். சொக்கன்
ஒரு திரைப்படத்துக்கு ‘முதல்வன்’ என்று பெயர்வைத்திருந்தார்கள்.
‘முதல்வர்’ என்பது மரியாதைக்குரிய ஒரு பதவி, ஆகவே, அதனை ‘முதல்வன்’ என்று ‘அன்’ விகுதியில் குறிப்பிடுவது மரபல்ல. ஆனால் அந்தத் திரைப்படத்தில் ஒருவர் திடீரென்று முதல்வராக நேர்வதால், அதைக் குறிப்பிடும்வகையில் அவரை ‘முதல்வன்’ என்று அழகாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
‘அர்’ என்பது மரியாதை விகுதிதான், ஆனால் உண்மையில் ‘அன்’ விகுதியில் எந்த மரியாதைக்குறைவும் இல்லை. பரிபாடலில் திருமாலை ‘அமரர்க்கு முதல்வன் நீ’ என்று எழுதுவார் கடுவன்இளவெயினனார்.
ஆகவே, ‘முதல்வன்’ என்பது மரியாதைக்குறைவான சொல் அல்ல, அது பாலினத்தைக் குறிப்பிடுவதுதான் ஒரு சிறு பிரச்னை.
இதனால், ஒரு பெண் அந்தப் பொறுப்புக்கு வரும்போது, அவரைக் குறிப்பிட ‘முதல்வி’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டியிருக்கும். முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களைப் பாலின அடிப்படையில் குறிப்பிட்டு அடையாளம்காட்டாமல் தவிர்க்கலாம் என்பதால், ‘முதல்வர்’ என்ற சொல் சிறந்ததாகிறது.
மாநிலத்தை ஆள்பவரைமட்டுமல்ல, பள்ளியை ஆள்பவரையும் ‘முதல்வர்’ என்றே அழைக்கிறோம். அந்த மாநிலத்தில், அல்லது பள்ளியில் பதவி அடிப்படையில் அவர்தான் முதலாமவர் என்பதே பொருள்.
அதேசமயம், அந்த முதல்வர்தான் அனைத்துக்கும் அடித்தளமாக இருக்கிறார் என்று கலித்தொகை உரையில் எழுதுகிறார் நச்சினார்க்கினியார். அதாவது, மாநிலத்துக்கு, பள்ளிக்கு அவரே அடித்தளம், அனைத்துப் பிரச்னைகளையும் தாங்கிச்சுமக்கிறார், வழிநடத்துகிறார் என்ற பொருளில்.
மாநிலத்தை ஆள்பவர் முதல்வர், சரி, நாட்டை ஆள்பவர்?
பிரதமர் என்பது வடமொழிச்சொல், அங்கே ‘பிரதம’ என்பது முதல்நிலையைதான் குறிக்கிறது.
ஆக, அவரும் முதல்வர்தான், நாட்டுக்கே முதல்வர்!
முன்பெல்லாம் இந்தியாவில் மாநில முதல்வர்களையே ‘பிரதமர்’ என்றுதான் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார் கள். அதன்பிறகு, அந்த வடமொழிச்சொல் மாறி, ‘முதல்வர்’ என்பது வந்தது, அதே பொருள்தான் என்றாலும், நாட்டின் பிரதமரிடமிருந்து அவரை மாறுபடுத்திக்காட்டியது!
(தொடரும்)