என். சொக்கன்
a
ரு பெரிய மாநிலத்தை முதல்வர்மட்டும் ஆள இயலாது. அவருக்கு உதவியாக இரண்டாமவர், மூன்றாமவரெல்லாம் இருக்கவேண்டுமே.
இவர்களை எண்ணிட்டு அழைக்காமல், ‘அமைச்சர்’ என்று பொதுச்சொல்லால் குறிப்பிடுகிறோம். சொல்லப்போனால் ‘முதல்வர்’ என்பதே ‘முதல்அமைச்சர்’ என்பதைதான் குறிப்பிடுகிறது.
‘அமைச்சர்’ என்ற சொல்லும் மிகப்பழையதுதான். திருக்குறளில் ‘அமைச்சியல்’ என்ற தனிப்பிரிவே இருக்கிறது, அமைச்சருடைய இயல்புகளைப் பலவிதமாக விளக்குகிறார் வள்ளுவர், உதாரணமாக:
‘தெரிதலும் தேர்ந்துசெயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.’
எதைச் செய்யவேண்டும் என்று தேர்ந்தெடுப்பதும், அதை எப்படிச் செய்யவேண்டும் என்று ஆராய்ந்து செயல்படுவதும், அதன்பிறகு அந்தச் செயலின் முடிவு என்ன என்பதை உறுதியாகச் சொல்வதும் அமைச்சின் குணங்கள்.
அதென்ன அமைச்சு?
‘அமை’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் ‘அமைச்சர்’. அரசியல் முறைகளைச் சிறப்பாக அமைத்து நாட்டை ஆளுபவர் என்பதால், அவர் ‘அமைச்சர்’ ஆகிறார். ‘வேந்தர்’ என்ற பெயரை ‘வேந்து’ என்று உகரத்தில் குறிப்பிடுவதுபோல, ‘அமைச்சர்’ என்ற பெயர், ‘அமைச்சு’ என்று ஆகிறது.
இப்படிப் பல அமைச்சர்கள் சேர்ந்து செயல்படுகிற குழுவை, ‘அமைச்சரவை’ என்பார்கள், அதாவது, ‘அமைச்சர்களின் அவை.’
முன்பு இதனை ‘மந்திரிசபை’ என்ற வடமொழிச்சொல்லால் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ‘மந்திரி’க்கு இணையான தமிழ்ச்சொல், ‘அமைச்சர்’, ‘சபை’க்கு இணை, ‘அவை’.
இதற்கும் திருக்குறளில் உதாரணம் பார்க்கலாம்:
‘தந்தை மகற்குஆற்றும் நன்றி, அவையத்து
முந்தியிருப்பச் செயல்.’
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்றி, அவனைக் கற்றவர்கள் அவையிலே முன்னால் இருக்கச்செய்வது. அதாவது, அவனை நன்கு படிக்கவைப்பது.
‘அவை’ என்ற சொல்லை அரசியல்சார்ந்த பல இடங்களில் பார்க்கலாம், பாராளுமன்றத்தின் ஒரு பிரிவை ‘மக்களவை’ என்கிறோம், இன்னொரு பிரிவை ‘மாநிலங்களவை’ என்கிறோம், இங்கே மாநிலத்தில் முன்பு ‘மேலவை’ இருந்திருக்கிறது!
இதுபோல எங்கெல்லாம் மக்கள் குழுவாகச் சேர்ந்து ஒரு பொதுவான பணியில் ஈடுபடுகிறார்களோ, அதையெல்லாம் ‘அவை’ எனலாம். ‘அறங்கூர் அவையம்’ என ஒன்று சிலப்பதிகாரத்தில் வருகிறது, இன்றைய நீதிமன்றம்தான் அது.
இந்தச் சொல்லுக்கு இன்னொரு பயன்பாடும் உண்டு: அஃறிணைப் பன்மை. உதாரணமாக, ‘பறவைகள் வந்தன, அவை அழகாக இருந்தன!’
(தொடரும்)