
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளது என கூறி, திமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணியினர், அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. .
பெரியகுளம் அருகேயுள்ள பாரதி நகரில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகனின் வீடு உள்ளது. இங்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இதனால், திமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டோர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்கெனவே அங்கிருந்த அதிமுகவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்தார்கள். ஆனால் வீட்டில் பணமோ, பொருளோ பதுக்கிவைக்கப்படவில்லை என்பது தெரிந்தது. இதனையடுத்து, திமுகவினரும், மக்கள் நலக் கூட்டணியினரும் கலைந்து சென்றார்கள்.
Patrikai.com official YouTube Channel