அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக விமர்சித்தார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜவடேகர் கூறியுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல திட்டங்கள், மோடி தலமையிலான மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜவடேகர், மின் தடை அமலில் இருக்கும் போது எப்படி இலவச மின்சாரம் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, ஒரு குடும்பத்திற்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கும் என்று 2011ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஜெயலலிதா, அதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், கடந்த தேர்தலின் போது தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்த வாக்குறுதியும் காற்றில் விடப்பட்டு விட்டதாக ஜவடேகர் விமர்சித்தார்.