இக்காலத்து தொழில்நுட்ப வளர்ச்சி பூமியை கடந்து நிலவு வரை சென்றுவிட்டது. ஒரு காலத்தில் நிலாவை காட்டி சோறு ஊட்டியவர்கள் இன்று நிலாவிற்கே சென்று சோறு செய்ய ஆயத்தமாகிவிட்டனர். 1959-ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை நிலவில் இறக்கிய மனிதர்கள் இன்று நிலவில் குடில் கட்ட தயாரிக்கிவிட்டார்கள்.
ஐரோப்பாவின் விண்வெளி மையம், சந்திரனில் கிராமம் ஒன்றை அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
“இந்த திட்டம் அறிவியல், வியாபாரம், சுரங்கம் மற்றும் சுற்றுலா என பல் துறை வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருக்கும்” என்று ஐரோப்பிய விண்வெளி மையத்தின் தலைவர் ஜொஹான் டையட்ரிச் வார்னர் கூறியுள்ளார்.
2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செவ்வாய் கிரகத்தை அடைய வேண்டும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசா திட்டமிட்டுகிறது. அப்படி செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டால், அங்கு செல்வதற்கு இடைத்தங்கல் இடமாக நிலவு கிராமம் இருக்கும் என்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தினர் தெரிவிக்கிறார்கள்.
லூனார் திட்டங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரோபோட்களின் உதவியோடு விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் தளம், நிலவில் கிடைக்கும் மணலை கொண்டு 3டி ப்ரின்ட் செய்யப்பட்ட அமைப்புகள் கட்டமைக்கப்படும் என்கிறார்கள் ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள்.