என். சொக்கன்
1
ந்தத் தேர்தலில் நாங்கள் வென்றால் இவற்றையெல்லாம் செய்வோம் என்று தலைவர் வாக்குறுதியளித்தார்.
வாக்கு+உறுதி என்ற இரு சொற்கள் இணைந்து வாக்குறுதியாகின்றன. இதை உறுதியாகச்செய்வோம் என்று சொல்வது, வாக்குத்தருவது வாக்குறுதி.
நாம் ஏற்கெனவே ‘வாக்கு’ என்ற சொல்லைப்பற்றி விரிவாகப் பார்த்துள்ளதால், இப்போது ‘உறுதி’யைப்பற்றிப் பேசுவோம்.
கடந்த சில ஆண்டுகளாக, தொலைக்காட்சியில் கட்டுமானப்பணிகளில் பயன்படும் இரும்புக்கம்பிகளின் விளம்பரங்கள் அதிகரித்துள்ளன. ‘உறுதியான கட்டடங்களுக்கு, எங்களுடைய கம்பிகளை வாங்கிப் பயன்படுத்துங்கள்’ என்கிறார்கள்.
‘உறுதி’ என்பது, நலம் தருவது, வலிமை சேர்ப்பது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற பழமொழி இந்தப் பொருளில் வந்ததுதான்.
கம்பராமாயணத்தில் விசுவாமித்திரர் தன்னுடைய யாகத்தைக்காக்க ராமரை அனுப்புமாறு தசரதரிடம் கேட்கிறார். ‘ராமன் சிறுவனாயிற்றே’ என்று தசரதர் தயங்க, அப்போது வசிஷ்டர் சொல்லும் வரி: ‘நின் மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் மறுத்தியோ?’
தசரதனே, உன் மகனுக்குக் கிடைக்காத நன்மைகளெல்லாம் கிடைக்கப்போகும் நாள் இது, இந்த நேரத்தில் உனக்கு என்ன தயக்கம்? தாராளமாக உன் மகனை விசுவாமித்திரரோடு அனுப்பிவை!
குமரேச சதகம் என்ற நூலில் குருபாததாசர் ஒரு நீண்ட ‘உறுதி’ப்பட்டியலே தருகிறார். எதற்கு எது உறுதி என விவரிக்கும் அப்பாடலின் ஒரு சிறு பகுதி:
‘கைக்கு உறுதி வேல், வில்,
மனைக்கு உறுதி மனையாள்,
கவிக்கு உறுதி பொருளடக்கம்,
கன்னியர்தமக்கு உறுதி கற்புஉடைமை,
சொல்லுக்கு உறுதி, சத்யவசனம்’
இப்படி வரிசையாகச் சொல்லிச்செல்லும் குருபாததாசர், நிறைவாக ஓர் அழகிய வர்ணனை சொல்கிறார், ‘மைக்கு உறுதியாகிய விழிக் குறமடந்தை, சுரமங்கை மருவும் தலைவனே, மயில்ஏறி விளையாடும் குகனே.’
வள்ளியின் விழிகள் மைக்கு உறுதியாம், அதாவது, மையால் அவள் விழிக்கு அழகில்லை, அவள் விழியால் மை அழகுபெறுகிறது!
(தொடரும்)