latha
விஜயகாந்தின் பலத்தை கருணாநிதியின் கண்ணுக்கு புலப்பட வைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
சேலம் மெய்யனூர் பகுதியில் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை பேசியது:
திமுக தலைவர் கருணாநிதி பிரசாரத்தில் பேசும் போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரணி தெரியவில்லை எனக் கூறி இருக்கிறார். பழம் நழுவி பாலில் விழும் எனக் கூறும் போது அவருக்கு விஜயகாந்தின் பலம் தெரியவில்லையா? திமுக கூட்டணிக்குப் போகாததால் அவரது கண்ணுக்கு தெரியவில்லை.
நிச்சயமாக அவரது கண்ணுக்கு விஜயகாந்த் பலம் புலப்படும். மே 19 ஆம் தேதி அவருக்கு விஜயகாந்தின் பலம் தெரியும். தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா மூன்றாவது அணி அல்ல. மக்கள் ஏற்றுக் கொண்ட முதல் அணியாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு 34 அரசுத் துறைகளில் கொண்டு வரப்படும். அரசுப் பள்ளிகளில் காலை உணவு, விவசாயிகள், நெசவாளர்களுக்கு சலுகைகள், தமிழகத்தில் நதிகள் இணைத்து பொருளாதாரம் மேம்படுத்தப்படும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும். டாஸ்மாக் கடைகள் படிப்படியாக அகற்றி டாஸ்மாக் இல்லாத நிலையை உருவாக்குவோம். தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வர மக்கள் வாக்களிக்க வேண்டும்.
சேலத்தில் புதை சாக்கடைத் திட்டத்துக்கு சாலைகளைத் தோண்டி சரிவர சீரமைக்கவில்லை. அதேபோல, செட்டிச்சாவடி திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தாமல் உள்ளது. இதனால் குப்பைகளை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையம் அருகே கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர்.
சேலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களை சரிப்படுத்த சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும். தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். டைடல் பூங்கா வேலை தொடங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
சேலம் மாவட்டத்தில் தும்பல், அயோத்தியாபட்டணம், மெய்யனூர், தொளசம்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் பகுதிகளில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். ஓமலூரில்….: ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக மாநிலப் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம், தொளசம்பட்டி, ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:
ஓமலூர் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு இணையாக மாற்றப்படும். சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச் சாவடியை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை, ஓமலூர் மின் மயானம், காடையாம்பட்டியில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிழக்கு சரபங்கா, மேற்கு சரபங்கா நதியில் தடுப்பணைகள், கருப்பூரில் விவசாயிகள் விற்பனை மையம், அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம், அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
நதிகளை இணைத்து விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு, எந்த துறையிலும் லஞ்சம் முற்றிலும் இல்லாத நேர்மையான நிர்வாகம் தேமுதிக ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் நான் எங்கு சென்றாலும் கடந்த சில நாள்களாக, தொடர்ந்து பின்னாடியே வருகிறார். நாங்கள் சொல்லும் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்து சொல்கிறார். மலிவான அரசியலை கைவிட்டு, ஸ்டாலின் நேர்மையான அரசியலைத் தர வேண்டும்.
மின்சாரப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சர்களை சந்திக்கக் கூட ஜெயலலிதா மறுக்கிறார். தடையற்ற மின்சாரத்தை கொடுக்கும் திட்டத்தை அவர் அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியான பொய்யான வாக்குறுதிகளை ஜெயலலிதா சொல்கிறார். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை வெறும் 5 ஆண்டுகளில் விஜயகாந்த் ஏற்படுத்தித் தருவார் என்றார் அவர்.