
புதுக்கோட்டை: வயதாகிவிட்டதால் கருணாநிதிக்கு கண் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிரசாரத்தின் போது கூறினார்.
புதுக்கோட்டையில், நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி – தமாகா – தேமுதிக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது:
“தேர்தல் கருத்துக் கணிப்புகள் கருத்துத்திணிப்பாக மாறிவிட்டன. தமிழக தேர்தல் களத்தில் அமைந்துள்ள, 3வது அணி கண்ணுக்குத் தெரியவில்லை என கருணாநிதி சொல்கிறார். அது வயதாகிவிட்டதால் வந்த கோளாறு.
எம்ஜிஆர் குடியிருந்த வீட்டில் புகுந்தவர் ஜெயலலிதா: அண்ணா கட்டிய வீட்டில் புகுந்தவர் கருணாநிதி. இருவரும் ஒரே குட்டையில் ஊறியவர்கள்தான்.
தமிழகம் தனது தலைமையில் தலைநிமிர்ந்துள்ளதாகக் கூறும் ஜெயலலிதா முதலில் தனது அமைச்சர்களின் தலையை நிமிரச்செய்யட்டும். தமிழகத்தில் அனைத்து முறைகேடுகளிலும் லஞ்சம்,லாவண்யம் நடந்துள்ளது. எங்கள் கூட்டணித் தலைவர்கள் ஆறு முகங்கள். இனிமேல் எங்கள் கூட்டணிக்கு தமிழக தேர்தலில் ஏறுமுகம் தான். புதிய வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போரில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெல்லும்” என்று விஜயகாந்த் பேசினார்.
Patrikai.com official YouTube Channel