நாளை வெளியாக இருக்கும் விஜய்யின் புலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டார் நட்சத்திரங்கள், தரமான இயக்குநர், பிரம்மாண்ட செட்டிங், கிராபிக்ஸ் என்று பலவித அம்சங்களால் புலி திரைப்படம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
இந்த நிலையில் வழக்கம் போல தியேட்டர்களில் டிக்கெட் விலையை ஐந்து மடங்கு முதல் பத்து மடங்குவரை உயர்த்தி விற்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“புலி படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. ஆகவே டிக்கெட் கட்டணத்தில் 30 சதவிகிதம் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். தவிர முன்பு போல் சாட்டிலைட் டிவிக்கு படங்களை விற்பதில் பெரும் லாபம் கிடைப்பதில்லை. ஆகவே புலி படத்துக்கு ஒரிஜினல் கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக வைத்தே விற்பனை செய்யப்படும்!” என்கிறது திரையுலக வட்டாரம்.
ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்துக்கும் இதே போல விலை உயர்த்தி முறைகேடாக டிக்கெட் விற்கப்பட்டது சர்ச்சை ஆனது. அப்போது, “அதிக விலை கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறோம். ஆகவே டிக்கெட் விலையை உயர்த்தவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்கள் திரையுலகினர்.
ஆனால் இது ரசிகர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல. சட்ட மீறலும்கூட.
சரி, தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் என்ன செய்வது?
அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.
இந்த வழியை நாம் சொல்லவில்லை, திரைப்பாட தயாரிப்பாளர்களே சொல்லியிருக்கிறார்கள்.
ஆமாம்… கூட்டம் போட்டு தீர்மானமும் போட்டிருக்கிறார்கள். அதுவும் நன்கு வருடங்களுக்கு முன்பே!
கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி ஜனவரி எட்டாம் தேதி கூடிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், “ அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்” என்று தீர்மானமே போட்டிருக்கிறார்கள்.
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை ஆர் பன்னீர் செல்வம் ஆகியோர், “திரையரங்கத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்து நாங்கள் மட்டும் சம்பாதிப்பது போல் தயாரிப்பாளர்கள் கூறுவது தவறு. எங்களை அதிக விலைக்கு விற்க தூண்டுவதே தயாரிப்பாளர்கள்தான்.
ஆகவே, அப்படி புகார் செய்ய வேண்டும் என்றால் அதிக விலைக்கு விற்கத்தூண்டிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் புகார் பதிவு செய்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சரியான தீர்வாக இருக்கும்” என்றார்கள்.
தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களுமே சொல்கிறார்கள்.. அப்புறம் என்ன.. தவறு நடந்தால் “கத்தி” பட விஜய் மாதிரி குமுறி எழுங்கள், ரசிகர்களே..!