234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க.-த.மா.கா., பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா என ஐந்து முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. மேலும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனால் பலமுனை போட்டி ஏற்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். நேற்று பிற்பகல் 3 மணியுடன் மனுதாக்கல் முடிந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசிநாளான நேற்று மட்டும் 2,669 பேர் மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களில் 6,054 பேர் ஆண்கள்; 756 பேர் பெண்கள் ஆவார்கள். திருநங்கைகள் இருவரும் மனுதாக்கல் செய்து உள்ளனர். இதில் ஒருசிலர் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மொத்தம் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் மொத்தம் 23 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவரையும் சேர்த்து 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். விஜயகாந்த் என்ற பெயரில், அவரை தவிர மேலும் 2 பேர் இந்த தொகுதியில் மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் மொத்தம் 35 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மொத்தம் 24 பேரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் கடலூர் தொகுதியில் மொத்தம் 25 பேரும் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடைபெறும். அப்போது குறைபாடுள்ள மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
வேட்பு மனு பரிசீலனையின் போது 2 தொகுதிகளுக்கு ஒரு பொதுப்பார்வையாளர் இருப்பார். வேட்பு மனு பரிசீலனை முழுவதும் வீடியோ படமாக்கப்படும். எங்காவது பிரச்சினை எழுந்தால் பார்வையாளர் உடனே அங்கு சென்று விசாரணை நடத்துவார்.
யார்-யாருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன? என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள மே 2-ந் தேதி(திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவரும்.