tha
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்ற உறுதி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இன்று காலையில் மேளதாளம் முழங்க சாலிகிராமத்தில் உள்ள மண்டல அலுவகலத்திற்கு ஊர்வலமாக வந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
12 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவாகரிடம் தனது வேட்பு மனுவை வழங்கிய தமிழிசை உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.
பணம் கொடுக்க மாட்டோம், பொருளை கொடுக்கமாட்டோம் என்று உறுதி மொழியை வைத்துள்ளனர். வாக்காளர்களை வசப்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை படிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த வேண்டும். தேர்தல் விதிமுறையிலேயே கட்டாயமாக இருக்க வேண்டும். நாங்கள் இந்த உறுதிமொழியை நேர்மையாக எடுத்தோம்.
ஜனநாயகத்தின் தலைவர்கள் எளிய மக்கள்தான். இந்த தொகுதியைச் சேர்ந்த எளிய பெண்மணியைத்தான் முன்மொழியச் செய்தேன் என்றும் தமிழிசை சவுந்தராஜன் கூறினார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை துவங்கிய வேட்பு மனுதாக்கல் நாளையுடன் நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.