may
எதிர்க்கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை வரும் மே 2 ஆம் தேதி வெளியாகக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிக்கையில் பொது மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. தேர்தலில் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப் பேரவை தேர்தலின் போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது கொள்கைகள், திட்டங்கள், அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிடுவது வழக்கம். 15-வது சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலை ஒட்டி, திமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு, விவசாயம்-கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்ட திட்டங்கள் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றன. ஆளும்கட்சியான அதிமுக இதுவரை தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.
இதனால், தேர்தல் அறிக்கையில் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற விவரங்களை அறிய எதிர்க்கட்சியினர் உள்பட அனைத்துத் தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கை வரும் 2 ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் சென்னையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் எனவும் தெரிகிறது.
மக்களைக் கவரும் அறிவிப்புகள்: அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களைக் கவரும் பல அறிவிப்புகள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்புகளால் தேர்தல் களத்தில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அதிமுகவினர் கூறினர்.
இதனால், அதிமுகவினர் மத்தியில் தேர்தல் அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
பல திட்டங்கள்: கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தாண்டி அம்மா உணவகம், குடிநீர், உப்பு, சிமென்ட் என மக்களைக் கவரும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதுபோன்ற பல திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.