என். சொக்கன்
a
‘அறிவிருக்கா?’ என்று சுலபமாகக் கேட்டுவிடுகிறோம். அதன் உட்பொருள் என்ன?
இதுமட்டும்தான் அறிவு என்று யாராலும் வரையறுக்க இயலாது. கணித அறிவு மிகுந்த ஒருவருக்கு மொழியறிவு குறைவாக இருக்கலாம், கலையறிவு நிறைந்த ஒருவருக்கு உலக அறிவு குறைவாக இருக்கலாம்.
ஒரு விஷயத்தை அறிந்திருப்பது அறிவு. ஆகவே, ‘அறிவிருக்கா?’ என்ற கேள்வி உண்மையில் ஒருவருடைய புத்திசாலித்தனத்தைச் சந்தேகத்துக்குள்ளாக்குவதில்லை. ‘இதைப்பற்றி உனக்குத் தெரியுமா? தெரியாதா?’ என்றுதான் கேட்கிறது.
‘கணக்கைத் தப்பாப்போட்டிருக்கியே, அறிவிருக்கா?’ என்றால், இந்தக் கணக்கைச் சரியாகப் போடுவதற்கான அறிவு உனக்கு உள்ளதா என்று அர்த்தம். அந்த அறிவு இருந்தால், அவர் தவறு செய்திருக்கமாட்டாரே!
ஒரு விஷயத்தைப்பற்றி அறிந்திருக்காத நிலையை, ‘அறியாமை’ என்கிறோம். அதை அறிந்துகொண்டால் அறியாமை விலகும், அறிவு வரும்.
எப்படி அறிந்துகொள்வது?
பிறர் நமக்கு அறிவுறுத்தலாம். அதன்மூலம் நாம் அறியலாம், அறிவாளிகள் ஆகலாம், அறியாதவர்களுக்கும் அறிவிக்கலாம்.
மேற்கண்ட பத்தியில் உள்ள சொற்கள் அனைத்தும் ‘அறி’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தவை. அதாவது, அறிந்துகொள்ளுதல் என்பதிலிருந்து வந்தவை.
அரசியல் கட்சிகளின் அறிக்கைகள், அறிவிப்புகள் எல்லாமே இவ்வகையில் வருபவைதான். இவை அனைத்தும், மக்களுக்கு ஒரு விஷயத்தை ‘அறிவுறுத்துகின்றன’, இந்தத் தேர்தலில் எங்கள் கட்சி வென்று ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் என்று அவர்களை அறியச்செய்கின்றன, ஆகவே அதனைத் ‘தேர்தல் அறிக்கை’ என்கிறோம்.
‘அறிதல்’ நோக்கத்துடன் வெளியிடப்படுவது, அறிக்கை, அதேபோல் ‘கோருதல்’ நோக்கத்துடன் முன்வைக்கப்படுவது கோரிக்கை. இதுபோல் இன்னும் பல சொற்களைச் சொல்லலாம்.
வாழ்தல்தானே வாழ்க்கையின் நோக்கம்!
(தொடரும்)