
கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நலகூட்டணி சார்பில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் வைகோ தனது ஆதரவாளர்களுடன் மனுதாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக சென்றார்.
பின்னர் திடீரென கோவில்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவில்பட்டி கோட்டாட்சியருமான கண்ணபிரானிடம் தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா. கூட்டணியின் ம.தி.மு.க. வேட்பாளர் விநாயகா ஜி.ரமேஷ் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். வைகோ வேட்பாளராக மனுதாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்று வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரபை ஏற்படுத்தியது.
மனுதாக்கலின் போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட 4 பேர் உடன் சென்றனர். மனு தாக்கலுக்கு பின்பு கோட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வைகோ பிரசார வேனில் நின்றபடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் திறந்த வேனில் நின்ற படி ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்ததாக தேர்தல் பறக்கும் படை அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான வேலுமயில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வைகோ மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்தனர்.
Patrikai.com official YouTube Channel