pra
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக மே 12-ஆம் தேதி வேலூரில் முதல்வர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்தால் கூட்டத்தை வேலூருக்கு வெளியே நடத்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரக்கோணம் அருகே மாலை 7 மணியளவில் கூட்டம் நடத்த முடியுமா, அதற்கேற்ற இடங்கள் தேர்வாகுமா எனவும் அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகள் அரக்கோணம் பகுதியில் திங்கள்கிழமை பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.
மே 12-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பதாக ஏற்கெனவே அவரது சுற்றுப்பயண பிரசார திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்ச வெயில் அதாவது இதுவரை ஏப்ரல் மாதத்தில் வரலாற்றில் பதிவாகாத அளவில் 111 டிகிரி பதிவானது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானநிலையம் இருப்பதால் சென்னையில் இருந்து தனி விமானத்தில் வந்து ராஜாளியில் இறங்கி கார் மூலம் சென்று அரக்கோணத்தில் மாலை 7 மணிக்கு கூட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுமாறு வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை தெரிவித்தது. இதை அடுத்து அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்டச் செயலர் வி.ராமு, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி உள்ளிட்டோர் அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டனர்.
மேலும் ஐ.என்.எஸ். ராஜாளியில் வந்திறங்கும் முதல்வர் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்கு காரில் வந்து கலந்துகொள்வது போல் கூட்ட இடத்தைத் தேர்வு செய்ய முனைந்த நிர்வாகிகள் அரக்கோணத்தை அடுத்த பின்னாவரம், பருவமேடு, கும்பினிபேட்டை, ஸ்டீல்பிளேண்ட் ஆகிய பகுதிகளில் ஐந்து இடங்களைப் பார்வையிட்டனர். இதில் ஒரு இடம் கூட தேர்வாகவில்லை எனத் தெரிகிறது.
தற்போது காவேரிபாக்கம் அருகே சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் இடத்தை தேர்வு செய்ய இருப்பதாகத் தெரிகிறது.