yaja
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ., யசோதா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து யசோதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘’விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசி வந்தவர் செல்வபெருந்தகை. விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட ராஜீவ்காந்தி ரத்தம் சிந்திய ஸ்ரீபெரும்புதூரில் அவரை வேட்பாளராக அறிவித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை வேட்பாளராக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும். எனக்கு வாய்ப்பு தரவில்லை என்றாலும் பரவாயில்லை. வேறு யாருக்காவது வாய்ப்பு தர வேண்டும். எனக்கு வாய்ப்பு தந்தாலும் நான் போட்டியிட போவதில்லை.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 99 சதவீதம் எனக்கு தான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி என்றார். ஆனால், நான் தோல்வியடைந்துவிடுவேன் என்று கூறி செல்வபெருந்தகைக்கு ஒதுக்கி தந்திருக்கிறார். அவருடன் நான் மட்டும் தான் இருந்து வந்தேன். தற்போது அவர் என்னையும் ஒதுக்கிவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தலித்துக்களுக்கான 20 சதவீதம், பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை’’என்றார்.
யசோதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில், கட்சியின் அலுவலகத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் த.மா.கா.வினர் 500 பேர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற்று கொண்டிருந்தது.
விழா முடிந்து வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யசோதாவை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து யசோதா கட்சி அலுவலகத்துக்கு உள்ளே சென்றார். அங்கும் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.
அப்போது செல்வபெருந்தகை ஆதரவாளர்கள், யசோதா ஆதரவாளர் ஒருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.ஜோதி, யசோதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த யசோதா தனது 2 மணி நேர தர்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்”.