ராமண்ணா வியூவ்ஸ்:
மூத்த பத்திரிகையாளர் அவர். திடீரென அலுவலகத்துக்கு வந்தார். “வாரும்.. பெசன்ட் நகர் பீச் போகலாம்” என்று இழுத்துச் சென்றார்.
மாலை வெயில்தான். ஆனாலும் சுள் என்று அடித்தது. ஆகவே கடலைப் பார்த்தபடி காருக்குள்ளேயே அமர்ந்தோம்.
மூத்தபத்திரிகையாளர் பேச ஆரம்பித்தார்:
“”திடுமென உன் நினைவு வந்ததற்கு காரணம், இன்று உங்கள் பத்திரிகை டாட் காம் இதழில், வெளியாகியிருக்கும் “என்ன நடக்கிறது தி.மு.க.வில்” என்ற கட்டுரைதான். மிகச்சிறப்பாக இருக்கிறது அக் கட்டுரை” என்றவர், தனது செல்போனை எடுத்து, ஒரு படத்தை எடுத்துக்காட்டினார்.
மேடையில் நடுவாந்திரமாக வி.பி. சிங் நிற்க.. ஒரு புறம் வைகோ, இன்னொரு புறம் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
“இந்த படத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.. அதுவும் இந்த சமயத்தில் இதன் முக்கியத்துவம் அதிகம்..” என்றவர் என் பதிலை எதிர்பார்க்காமல் சொல்லத் தொடங்கினார்:
“இன்று கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்வதாய்ச் சென்ற வைகோ, திடுமென தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தாரே….! அதே கோவில்பட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.
1989ம் வருட சட்டமன்ற பொதுத் தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் நின்றார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக வி.பி.சிங் கோவில்பட்டி வந்தார். அவரை அழைத்துவந்தவர், அப்போது தி.மு.க.வின் தென் மாவட்ட முகமாக இருந்த வைகோதான்.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வைகோவுக்கு தனி செல்வாக்கு. அவர் சொன்னால், கருணாநிதியே சொன்னது போல.
அந்த 1989 சட்டமன்றத் தேர்தலில் தங்கவேலு, சங்கரன் கோயில் தொகுதியில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்று அமைச்சரானார். கே..எஸ்.ராதாகிருஷ்ணன் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்..” என்ற மூத்த பத்திரிகையாளர், “அன்றைய கோவில்பட்டி பிரச்சாரத்தில் வி.பி. சிங்கை அழைத்து வந்து நாயகனாக ஒளிவீசியவர் வைகோ. அவர்தான் சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன். இப்போது அதே கோவில்பட்டியில், தான வேட்பாளராக நிற்கவில்லை என்று அறிவித்திருக்கிறார் வைகோ” என்று சொல்லி நிறுத்தினார் மூ.ப.
நான், “25 வருடங்களுக்கு முன்பே தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.. தற்போது ஏன் அவருக்கு சீட் தரவில்லை” என்றேன்.
சற்று நேரம் மவுனமாக இருந்த மூ.பத்திரிகையாளர் பிறகு,”சரியான கேள்வி கேட்டாய்.
அவருக்காக பிரச்சாரம் செய்ய, வி.பி. சிங்கை அழைத்துவந்தார் வைகோ. அப்போது வைகோவின் உதவியாளர் போல் செயல்பட்டவர் மைதீன்கான். அனிதா ராதாகிருஷ்ணன், அப்பாவு ஆகியோர் கட்சியிலேயே இல்லை. பூங்கோதை, கீதா ஜீவன் ஆகியோர் பாவாடை சட்டையுடன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள்.
இவர்களுக்கு எல்லாம் தி.மு.க. தலைமை பலவித வாய்ப்புகளை கொடுக்கிறது. ஆனால், கே.எஸ். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு இல்லை.
ஈழப்போராளிகளுக்கு அவ்வளவு உதவியவர் அழர். கண்ணகி கோயில் பறிபோகாமல் இருக்க, காவிரி பிரச்சினைக்காக, வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிக்குண்ட மக்களுக்காக.. என்று எத்தனை சட்டப்போராட்டங்களை பொதுநல நோக்கோடு நடத்தியவர் அவர்!
அது மட்டுமா.. ஈழ விவகாரத்தில் தி.மு.க. மீது உலக்தமிழர்கள் கடும் கோபத்தோடு இருந்த காலகட்டத்தில், அக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலினை ஜெனிவாவுக்கு அழைத்துச்சென்று ஈழத்தமிழருக்காக மனு கொடுக்கவைத்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான்.
அவர் மீது மிகுந்த அபிமானம் உள்ள ஈழத்தமிழர்கள் எல்லாம் இதனால் வருத்தமுற்றனர். தி.மு.க. மீதான களங்கத்தை நீக்க, தான் பழியை ஏற்றுக்கொண்டவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
அப்படிப்பட்டவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை தி.மு.கவில்” என்று சொல்லி நிறுத்தினார் அந்த மூத்த பத்திரிகையாளர்.
சற்று இடைவெளிவிட்டு அவரே, “ஒருமுறை மிகவும் மனம் நொந்த ராதாகிருஷ்ணன், “காங்கிரஸிலேயே இரு என்று வற்புறுத்தினார் வாழப்பாடியார். அதை நான் கேட்காமல் பழ. நெடுமாறனுடன் சென்றேன். அதுதான் நான் செய்த பெரும் தவறு. பேசாமல் காங்கிரஸிலேயே இருந்திருக்கலாம்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுச் சொன்னாராம்” என்று முடித்தார் மூத்த பத்திரிகையாளர்.
“ஹூம்.. அரசியிலில் தகுதியே தகுதி இன்மை ஆகிவிடும் போலிருக்கிறது..” என்று சொல்லியபடியே, காரை கிளப்பினேன் நான்.