ராமண்ணா வியூவ்ஸ்:
பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னது: “அரசியல் கட்சிகளைப்போலவே தேர்தல் ஆணையமும் மக்களை ஏமாற்றுகிறதோ என்றுதான் தோன்றுகிறது. வாக்காளர் அனைவரும் ஓட்டுப்போடவேண்டும், நூறு சதவிகித வாக்குப்பதிவு நடக்க வேண்டும் “ என்றெல்லாம் விளம்பரங்கள் செய்து கோடி கோடியாக செலவழிக்கிறார்கள். ஓட்டுப்போடும் வயதே ஆகாத மாணவர்களை வேகாத வெய்யிலில் ஊர்வலம் விட்டதும் நடந்தது.
தபால் ஓட்டு என்பது, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.
அதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. வாக்குச்சாவடியில் பணியமர்த்தப்படும் துப்புரவுத் தொழிலாளிகளுக்கும் தபால் ஓட்டு கிடையாது.
அத்தியாவசியப் பணியான மருத்துவர்கள், பேருந்து மற்றும் ரயில்வே பணியாளர்கள் என்று எத்தனையோ பேர் தங்கள் பணி காரணாக ஓட்டுப்போட ஊருக்குச் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கும் தபால் ஓட்டு அவசியம்தானே… தேர்தல் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் பலரும்கூட ஓட்டளிக்க வாய்ப்பு அமையாத சூழல்தான்.
இவர்கள் மட்டுமல்ல… அரசின் நிர்வாகக் கோளாறு, மோசமான பொருளாதார நடவடிக்கையால் நாடு முழுதும் பல கோடி மக்கள் இடம் பெயர்ந்து பிழைக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு சொந்த ஊருக்குச் சென்று ஓட்டுப்போட முடியும்?
தேர்தல் வந்தவுடன், அரசியல் கட்சிகளை அழைத்து மாய்ந்து மாய்ந்து கூட்டம் நடத்துகிறது தேர்தல் கமிசன். ஆனால் வாக்காளர்களின் பிரச்சினையைக் காதுகொடுத்து கேட்பதில்லை.
இப்போது வெளிநாட்டில் இருப்பவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்திருக்கிறது. மகிழ்ச்சிதான். வெளி மாநிலத்தில் இருப்பவர்களுக்கு?
இது கணினி யுகம். ஒவ்வொரு ஊரிலும், வெளியூர் வாக்களார்கள் வாக்களிக்க தனிப்பட்ட கணினி மையம் அமைக்கலாமே. (அதாவது எந்த ஊரில் வாக்கு இருந்தாலும் ஓட்டுப்போட வசதி) வேண்டுமானால் இதற்கு முன் அனுமதி பெற வேண்டும், அடையாள அட்டை வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். இதனால் ஓட்டுப்போடுவதற்காக ஊருக்குப் போய்வரும் செலவும் மிச்சம்.
கோடி கோடியாக தேர்தலுக்கு செலவழிக்கிறார்கள்… வாக்குச்சாவடியைக் கவனிப்பதே இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் வெளித் திடலில் வெய்யிலில் நின்றுதான் ஓட்டளிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு பயந்தே வயதானவர்கள் பலரும் வாக்குச்சாவடி பக்கம் வருவதில்லை. ஒரு சாமியானா பந்தல் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தக்கூட முடியாதா?
வாக்களித்தவர்கள் பட்டியலையும் இணையத்தில் வெளியிடலாம். வாக்களிக்காதவர், வாக்களித்ததாக இருந்தால் கள்ள ஓ்டடு என்பதை அறிய முடியும். அந்தகுறிப்பிட்ட வாக்கை நீக்கலாம்.
இப்படி எளிய வழிகளைச் செய்தாலே வாக்குப்பதிவு அதிகரிக்கும். இவர்கள் பக்கம் குறையை வைத்துக்கொண்டு, ஏதோ மக்கள்தான் வரவில்லை என்பதுமாதிரி நடிக,நடிகையரை வைத்து கோடி கோடியாய் செலவழித்து “ஓட்டுப்போடுங்க” என்று பிரச்சாரப் படங்கள் எடுக்கிறார்களே…
இனியாவது தேர்தல் ஆணையம் சிந்திக்குமா?”