பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா கிங் ஃபிஷர், யுனைடெட் ப்ரூ வரீஸ் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தத் தொழில் நிறுவனங்களுக்காக அவர் இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளிடம் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்.
குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரு வங்கிகளிடம் அதிக தொகையை அவர் கடனாகப் பெற்றுள்ளார். இந்த கடனை விஜய் மல்லையா திருப்பி செலுத்தவில்லை. இதைத் தொடர்ந்து ”வேண்டும் என்றே கடனை திருப்பித் தராதவர்’ என்று இந்த வங்கிகளால் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார்.
நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா, ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார்.
மேலும் அவருக்கு கடன் கொடுத்த 13 வங்கிகள் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், விஜய் மல்லையா வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் தடுக்க வேண்டும் என்று வங்கிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றும், கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கடந்த மார்ச் 2-ம் தேதியே இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக சி.பி.ஐ. தன்னிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதற்கிடை யே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்து விஜய் மல்லையா விலகியதற்காக, டியாஜியோ நிறுவனம் வழங்கிய ரூ. 515 கோடியை பெறவும் இந்திய கடன் வசூலிப்பு முகமை விஜய் மல்லையாவுக்குத் தடை விதித்திருந்தது.
பிரதமரும், நிதியமைச்சரும் தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தனர்.
டிவிட்டர் மூலம் தமது கருத்துக்களை பதிவிட்டு வந்த விஜய் மல்லையா, தாம் எத்தகைய குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், இந்திய நீதித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், தற்பொழுது உகந்த சூழ்நிலை நிலவாததால் தாயகம் திரும்ப விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். மார்ச் 10 மற்றும் ஏப்ரல் 02 ல் அவர் அமலாக்கப்பிரிவினரின் முன் ஆஜராகவில்லை.
அண்மையில், வெளிவிவகாரத் துறை விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டை முடக்கியது. தற்பொழுது அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், தம்முடைய லண்டன் அலுவலக முகவரியாக லேடிவால்க், லண்டனை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளதாக விஜய் மல்லையா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் , 1992 முதல் தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்றும் தெரிவித்துள்ளார்.
11.5 மில்லியன் பவுண்ட் மாளிகையை பிரிட்டிஷ் பார்முலா-ஒன் சாம்பியன் லூயிஸ் ஹாமில்டனின் தந்தையிடம் இருந்து கிங்க் பிஷெர் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் குடிமகன் ஆனார் விஜய் மல்லையா