சமீப காலமாக, சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தானில் சீன ராணுவப் படைத் தள மையங்கள் துவக்கி வருகின்றது.
56 இன்ச் மார்பு கொண்ட மோடி ஆட்சிக்கு வந்தால் அண்டை நாடுகள்
பயந்து நடுங்கும் என வீராவேசமாக பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை சீனாவுடனான தங்களின் உறவை மேலும் பலப்படுத்திக்கொண்டன. இது எதிர்காலத்தில் இந்தியாவிற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது ஆகும்.
பதங்கோக் தாக்குதலில் மூளையாய் செயல்பட்ட ஜெயிஸ்-இ-முஹமது அமைப்பின் தலைவர் மசூத் ஆசார்-யை ஐ. நா. சபையில் தீவிரவாதியாக அறிவிக்க சீனா மறுப்புத் தெரிவித்து விட்டது.
இந்நிலையில், சீனாவுக்கு அதன் கசப்பு மருந்தை இந்தியா திருப்பிக் கொடுத்துள்ளது.
சீனாவில், கிழக்கு துருகிஸ்தான் எனும் தனி நாடு உருவாக்க போராடி வரும் உய்கூர் இன மக்கள் பெரும்பாலும் சிஞ்சியாங் இருந்து இடம்பெயர்ந்த துருக்கி மொழி பேசும் முஸ்லீம்கள் ஆவர். இந்தப் போராட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்காணோர் பலியாகியுள்ளனர்.
கடந்தக் காலங்களைப் போலில்லாமல், வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள , சீனாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அந்நாட்டுப் போராளிகளுக்கு இந்தியா வருவதற்கு விசா அனுமதித்து வருகின்றது.
அடுத்த வாரம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் கம்யூனிஸ்ட் சீனாவை ஜனநாயக நாடாகக் மாற்றுதல் எனக் கோரி நடைப்பெறவுள்ள பன்னாட்டு மாநாட்டிற்கு சீனாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள உலக உய்கூர் காங்கிரஸ்தலைவர் டோல்கன் இசா உள்ளிட்ட பல்வேறு சீன போராளிகளுக்கு விசா வழங்கி உள்ளது.
தரம்சாலா திபெத் அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் அடைக்கலமாக விளங்குகின்றது. தலாய் லாமாவும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது.
கடந்தக் காலங்களில், சீனாவின் கொள்கைகளை எதிர்க்கும் திபெத்தியர்களை மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதித்து வந்தது. சமீபக் காலங்களில், மற்ற நாடுகளின் போராளிகளுக்கும் அனுமதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டொவெல் சீன சுற்றுப்பயணத்தை முடிக்கும் போது, இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இரு நாடுகளுக்கும் ஏற்ற எல்லைச் சமாதான ஒப்பந்தத்தை இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட வேண்டியது தான் பாக்கி என கூறி இருந்த நிலையில், சீனப் போராளிகளுக்கு இந்தியா விசாவினை வழங்கியுள்ளது . இது இந்திய-சீன உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.