evks3434
ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சேலத்தில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடும் வெயில் கொடுமைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த கொடுமை தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் 108 டிகிரி கொளுத்தும் வெயில் நிலவுவதால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாமென்று கலெக்டர் விடுத்த எச்சரிக்கையை மீறி காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை, 4 மணி நேரம் ஜெயலலிதா கூட்டத்திற்காக வெயிலில் காக்க வைத்ததால் இந்த விபரீத கொடுமை நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே விருத்தாச்சலம் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெயிலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வருகிற தேர்தல் பிரச்சாரத்தில் குளுகுளு மேடையில் அமர்ந்தவாறு ஜெயலலிதாவின் பிரச்சார முறை தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கி வருகிறது. அவர் ஆற்றுகிற உரையை கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லை. பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம் வெயில் கொடுமையால் வெளியே போக முடியாமல் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகிற காரணத்தால்தான் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய உயிரிழப்புகள் குறித்து இதுவரை ஜெயலலிதா வருத்தம் தெரிவிக்கவில்லை. இது அவரது கல் நெஞ்சத்தைக் காட்டுகிறது. நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தருமபுரியில் வேளாண் பல்கலைக் கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்தையே கொளுத்தி பல மாணவிகள் உயிரிழப்புக்கு காரணமான அ.தி.மு.க.வினரையே கட்சியை விட்டு நீக்காத ஜெயலலிதா தற்போது உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் வடிப்பார் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.
ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி தேர்தல் பிரச்சாரமுறை என்பது ஜனநாயகத்தில் எவராலும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகும். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 25 அ.தி.மு.க. வேட்பாளர்களை மந்தையில் அடைத்து வைப்பதைப் போல கீழே நிற்க வைத்து, மேலே அமைக்கப்பட்ட மேடையில் ஜெயலலிதா உட்கார்ந்து கொண்டு முழங்குவது இந்திய வரலாற்றில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் இதுவரை செய்யாத மிகப்பெரிய புதிராக இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில்தான் மக்கள் கூட்டத்தைவிட்டு புறக்கணிக்கிற நிலை ஏற்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர்களில் 27 பேரை உளவுத்துறையின் ரகசிய அறிக்கையை வைத்துக் கொண்டு மாற்றிய கொடுமையும் ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வேட்பாளராக யார் இருக்க வேண்டுமென்பதை கட்சிதான் முடிவெடுக்க வேண்டுமேதவிர உளவுத்துறை முடிவெடுப்பது ஜனநாயகத்தில் ஜெயலலிதாவுக்கு கடுகளவும் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.
ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சாரத்தில் பங்கேற்க பணம் கொடுத்து கூட்டி வரப்பட்டு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அடைத்து வைக்கப்படுவதால் ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிற அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எனவே, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய தடையின் மூலமாகத்தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுக்க முடியும். இந்த தடையை உடனடியாக விதிக்கவில்லையெனில் நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.