ரஜினியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகை ஏமி ஜாக்ஸன் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு சர்ச்சைக்கு பெயர் போன பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா சில ட்வீட்களை வெளியிட்டார்.
அதில் அவர் , “மிகப்பெரிய நட்சத்திரமான ரஜினி, புகழுக்கு அழகான தோற்றம் முக்கியம் என்கிற எண்ணத்தைத் தவிடுபொடியாக்குகிறார். பார்க்க நன்றாக இருக்கமாட்டார். சிக்ஸ்பேக் கிடையாது. சரியான உடலமைப்பும் இல்லை. இரண்டரை நடன அசைவுகள்தான் அவருக்குத் தெரியும்.
இப்படியொருவர் உலகில் வேறெங்கும் சூப்பர் ஸ்டார் ஆகமுடியாது. இவர் கடவுளுக்கு என்ன அளித்தார்? இப்படி ஒரு வாழ்க்கையை கடவுள் இவருக்கு அளித்திருக்கிறார்!
ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது என்பதற்கு ரஜினியே ஓர் எடுத்துக்காட்டு.புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர்களும் இந்த ரஜினி மீதான கொண்டாட்டத்தை விளக்கமுடியாமல் குழம்பித் தவிப்பார்கள் என்றார்.
ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியுள்ளதாவது:
“நான் ரஜினியைப் பாராட்டுகிறேன் என்பதுகூட அவரது ரசிகர்கள் சிலருக்குத் தெரியவில்லை. என்னுடைய ட்வீட்கள் எல்லாம் அவரைப் பாராட்டுபவைதான். தவிர ரஜினியேகூட தன்னைக் கிண்டல் செய்து மேடையில் பேசுகிறாரே.
என்னுடைய ட்வீட்களைத் தவறாகப் புரிந்துகொள்வதைப் பார்க்கும்போது பவர்ஸ்டார் ரசிகர்களே பரவாயில்லை போலிருக்கிறது என்று ரஜினி ரசிகர்களை காட்டமாக இயக்குநர் ராம்கோபால் வர்மா விமரிசித்திருக்கிறார்.
இதற்கிடையே, ராம்கோபால் வர்மா குறிப்பிட்டது தமிழகத்து பவர்ஸ்டார்(!) சீனிவாசனை அல்ல, தெலுங்கு பவர்ஸ்டார்(!) பவன்கல்யாணைத்தான் என்றும் விவாதம் தொடர்கிறது.