“குற்றம் கடிதல்” திரைப்படத்தை தனது கோணத்தில் அலசுகிறார் பிரபல எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான பாஸ்கர்சக்தி.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் புதிதாக சில நல்ல முயற்சிகள் வரத் துவங்கி இருக்கின்றன. உலக சினிமா டிவிடிக்கள் கிடைப்பதும், டிஜிட்டல் கேமரா போன்ற சாதனங்களின் வருகையும் சில புதிய சிந்தனைகளையும் தைரியத்தையும் விதைத்து அதன் காரணமாக சில புது வரவுகள் நம்பிக்கை கீற்றாக வெளிப்படுகின்றன. நம்மை விட பெரிய மார்க்கெட்டான இந்தியிலும் நம்மை விட சிறிய மார்க்கெட்டான மலையாளத்திலும் சாத்தியமான சில நல்ல படங்களைப் போல் தமிழில் ஏன் எதுவும் வரவில்லை எனும் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது குற்றம் கடிதல் திரைப்படம்.
குற்றம் கடிதல் திரைப்படத்தின் கதை ஒன்றும் அபூர்வமானதல்ல. நம் அனைவருக்கும் தெரிந்து ஒரு விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டு நம் சமூகத்தின் பல்வேறு விதமான சித்திரங்களை தீட்டிக் காட்டுகிறது….ஒரு மாணவனை கோபத்தில் அறையும் ஒரு ஆசிரியை…அதன் விளைவாக நேரும் விபரீதம்..அது எத்தனை பேரை எத்தனை விதமாக அலைக்கழிக்கிறது என்பதை விறுவிறுப்புடன் சொல்லுகிறது. ஒரு சிறிய முடிச்சை அழகான திரைக்கதையாக மாற்றி சற்றும் தொய்வில்லாமல் இறுதி வரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் பிரம்மா.
மனித உணர்வுகள்,சமூகத்தில் நிலவும் உறவுகள் இரண்டுமே விசித்திரமானவை..அழகானவை அதே நேரம் சிக்கல் நிறைந்தவை.குற்றம் கடிதல் மனிதர்களின் உணர்வுகளின் இயல்பை மோதலை அதன் முரண்பாட்டை வெகு இயல்பாக அழகாக பின்னிச் சொல்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நல்லவர்கள்…
ஆனால் ஒரு சிறு பொறி நெருப்பாக மாறி அனைவரையும் உஷ்ணமாக்குகிறது….மாணவனை சாதாரணமாக கை நீட்டியதை தவிர எந்த தவறும் செய்யாத அந்த டீச்சரும் அவள் கணவனும் உறுத்தலும் குற்ற உணர்வும் பீறிட அலைக்கழிகிறார்கள்….யாருக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாது என்று பரிதவிக்கிற அந்த ஹெட்மாஸ்டர் அவர் மனைவி, மகளை வெறுத்து ஒதுக்கி விட்டு பிறகு அந்த பையன் பிழைக்க வேண்டி பைபிளோடு ஹாஸ்பிடலில் வந்து நிற்கும் டீச்சரின் அம்மா, ஒரே மகனை இழந்து விடுமோ என்று வெறித்த பார்வையுடன் அலையும் அந்த தாய், நேர்மையான கோபம் கொண்ட அவளது அண்ணன் என்று அத்தனை நல்ல மனிதர்களும் சூழ்நிலையின் பகடைக் காய்களாக மாறும் ரசாயனத்தை படம் போகிற போக்கில் சொல்லிப் போகிறது…ஒரு பார்வையாளனாக நம்மை பரிதவிக்க வைக்கிறது…அந்த சிறுவனுக்கும் அந்த டீச்சருக்கும் எதுவும் நேர்ந்து விடக் கூடாது எனும் தவிப்பை பார்வையாளனுக்கு ஏற்படுத்தியதில் நூறு சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர்.
கதாநாயகன் கதாநாயகி டூயட் காமெடி சீன் என்று உருவாக்கி வைத்திருக்கிற டெம்ப்ளேட்டுகளை உடைத்துப் போட்டு விட்டு ஒரு வாழ்வனுபவத்தை நெஞ்சுக்கு மிக நெருக்கமாக சொல்லி இருக்கிறது இந்த திரைப்படம்…. இந்தப் படத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுத முடியும்..
ஆனால் இது விமர்சனம் அல்ல…இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்கிற பரிந்துரை. பரிந்துரைக்கு காரணம் இது போன்ற நேர்மையான சிறந்த உருப்படியான முயற்சிகளை நாம் பாராட்டாமல் இருந்து விடக் கூடாது என்கிற எண்ணம்.. பார்த்ததில் இருந்து உள்ளே புகுந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது இந்தத் திரைப்படம். ஒரு முழுமையான கலை அனுபவம்தான் நம்மை இப்படி அலைக்கழிக்க முடியும் அந்த அனுபவத்தை தந்த பிரம்மாவுக்கு நன்றிகளும், பாராட்டும்.