குஜராத், அகமதாபாத், நரோடா வீட்டு வசதி வாரியத்தில் குடியிருக்கும் தினேஷ் தண்டானி வயது 30,கடந்த செவ்வாய்க்கிழமை இரவு , குடிபோதையில் வீட்டிற்கு சென்று தமது மனைவியிடம், தனக்கு மிகப் பிடித்தமான உணவான ஜீரா சாதம் மற்றும் பருப்புக் குழம்பும் கேட்டு நச்சரித்துள்ளார்.
அதனைச் சட்டைச் செய்யாத மனைவி, சப்பாத்தி சமைத்துக் கொண்டிருந்தார் .
இதனால் மனமுடைந்த தினேஷ், தம் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு மண்ணெண்ணையைத் தம் உடம்பில் ஊற்றி பற்றவைத்துக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. சிறிது நேரம் கழித்து அவரது அறையில் இருந்து புகை வருவதைப் பார்த்த குடும்பத்தினர் அவர் தீக்குளித்ததைப் பார்த்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று அவர் உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன் அவர் சாகெர்கோட்டா காவல் நிலைய போலிசாருக்கு அல்ள்த்த மரண வாக்கு மூலத்தில் ” நான் குடி போதையில் இருந்தேன். என் மனைவி எனக்கு பிடித்த உணவான ஜீரா சாதம் மற்றும் பருப்பு சமைத்துக் கொடுக்காததால் விரக்தியில் இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டேன்” என்றார்.
குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. எனினும் மது மற்றொரு உயிரைப் பறித்துவிட்டது. மது போதையில் தன்நிலை மறந்து ஒரு வாலிபர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.