Karunanidhi_Jayalalithaa
திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதத்தில்,
’’தேர்தல் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதா தொடங்கிய நாளிலிருந்து, என்னைப் பற்றி ஏதாவது குறை சொல்லிப் பேசாவிட்டால் அவருக்கு பேசிய மன நிறைவே இருக்காது போலும்! ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் அவர் எழுப்பும் பிரச்சினைகளின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சிதான். வாக்களிக்கப் போகும் முன்னர், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளையும் படிக்கட்டும், நான் அவற்றிற்கு அன்றாடம் தருகின்ற விரிவான பதில்களையும் படிக்கட்டும், எது உண்மை, யார் பக்கம் நியாயம் என்று தெளிவடையட்டும்!
அருப்புக்கோட்டையில் பேசிய அம்மையார், “கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு கருணாநிதி உடந்தை என்பதை நான் அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டுகிறேன். அ.தி.மு.க. ஆட்சி அமைந்த வுடன் உச்ச நீதிமன்றத்தின் மூலம் கச்சத் தீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கச்சத்தீவு மீட்கப்படுமாம்! இது 2016ஆம் ஆண்டு! சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு, ஆம் 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1991ஆம் ஆண்டு, 15-8-1991 அன்று கோட் டையில் விடுதலை நாளையொட்டி கொடியேற்றி விட்டுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “கச்சத் தீவை மீட்டே தீருவேன்” என்று சூளுரைத்தாரே, அதற்குப் பிறகு இவ்வளவு காலமும் என்ன செய்து கொண்டிருந்தார்? கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை? தேர்தல் என்றதும் கச்சத்தீவு நினைவுக்கு வரு கிறதோ? “கச்சத்தீவை மீட்டே தீருவேன்” என்ற ஜெயலலிதா, அடுத்த எட்டே மாதத்தில் அதாவது 20-4-1992 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? “கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று, மீட்பதற்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் போலப் பேசியது அவைக் குறிப்பில் இன்னமும் இருக்கிறது.
இந்தப் பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக “அம்மையார்” இதுவரை எத்தனை முறை அறிக்கை விடுத்திருக்கிறார் என்று எண்ணித்தான் பார்க்க வேண்டும்! ஒவ்வொரு முறையும், கச்சத் தீவினை நானும், மத்திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்டதாகப் புகார்களை அடுக்கத் தொடங்கி விடுவார்!
கச்சத் தீவைத் தாரை வார்க்க தி.மு. கழகம் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை; தாரை வார்க்க உடன்படவும் இல்லை என்பதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் அறை கூவல் விட்டுச் சொல்லத் தயார்! தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல; தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத் தீவு பிரச்சினையை எழுப்பி, “கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத் தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி, அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியதே இல்லை என்றெல் லாம் நான் பல முறை திரும்பத் திரும்ப விளக்கிய பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா எழுப்புகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவரி டம் பேசுவதற்கு வேறு பொருள் இல்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது!
30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “The ceding of this tiny island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations” அதாவது, “தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ் சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்” – என்று அப் போதும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததை நியாயப்படுத்திக் குறிப்பிட்டது உண்டா இல்லையா என்று 19-7-2013 அன்று நான் எனது “உடன்பிறப்பு” மடலில் கேட்டிருந்தேனே, அதற்கு இன்று வரை ஜெயலலிதா ஏன் பதில் சொல்லவில்லை? “திருடன் கையில் தேள் கடித்ததைப் போல” என்ற ஒரு பழமொழியைச் சொல்வார்களே! அதைப் போன்றதா இதுவும்?
ஒப்பந்தம் 28-6-1974 அன்று கையெழுத்தான உடனேயே, அதற்கு அடுத்த நாளே 29-6-1974 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் கச்சத் தீவு பற்றித் தீர்மானம் நிறைவேற்றியது உண்மையா இல்லையா? ஆனால் அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட அப்போதே மறுத்துவிட்டது. அதே 29-6-1974 அன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
“Dear Prime Minister,
On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri Lanka Agreement, according to which, Sri Lanka’s claim to Katchathivu has been conceded by the Government of India. May I express the hope that you will take into consideration the decision contained in the Resolution and take appropriate action?”
– என்று எழுதியிருக்கிறேன். இதுதான் கச்சத் தீவினை நான் தாரை வார்த்துவிட்டேன் என்பதற்கான ஆதாரமா? இதுதான் நான் துரோகம் செய்ததற்கான அடையாளமா? ஜெயலலிதா விளக்கம் அளிப்பாரா?
1974ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியில் இருந்த போதே, கழகப் பொதுக்குழுவில், “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான கச்சத் தீவின் மீது இலங்கைக்கு அரசுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு செய் துள்ள ஒப்பந்தத்தை, கழகப் பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக்கு எதிராக இந்த ஒப்பந்தம் அமைந்து விடக் கூடாது என்று தமிழக தி.மு.க. அரசு பல முறை ஆதாரங்களுடன் மத்திய அரசை அணுகித் தடுத்தும்கூட, அதனை அலட்சியப்படுத்தி விட்டு மத்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு அளித்துள்ள செயல் வேதனை தருவ தாகும்” என்றெல்லாம் தீர்மானம் நிறை வேற்றியிருக் கிறது. தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்ல, 24-7-1974 அன்றே கச்சத்தீவுப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது பொய்யா? தஞ்சை மாவட்டத்தில் நடை பெற்ற கூட்டங்களிலே முதலமைச்சராக இருந்த நானே கலந்து கொள்ளவில்லையா?
23-7-1974 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச் சினை வந்தபோது, “தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அப்போது தி.மு.கழக உறுப்பினராக இருந்த நண்பர் இரா.செழியன் குறிப்பிட்டாரா இல்லையா?”“தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோதப் போக்காகும்” என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் நண்பர் எஸ்.எஸ். மாரிசாமி தெரிவித்தாரா இல்லையா? இந்த நிகழ்வுகளெல்லாம் ஜெயலலி தாவுக்குப் புரியாதா?
அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திலேயே, அதாவது 21-8-1974 அன்று பேரவை யில் அரசின் சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானம், “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத் தைத் தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத் தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறது” என்பதாகும். இதெல்லாம் துரோகத்திற்கான ஆதார ஆவணமா? இதையும் ஜெயலலிதாவினால் புரிந்து கொள்ள முடியாதா?
தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது கருணாநிதி கச்சத் தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதல் ஐந்தாண்டுகளாக ஜெயல லிதாதானே ஆட்சியிலே இருக்கிறார், இவர் ஏன் கச்சத் தீவை மீட்கவில்லை என்று நான் கேட்டிருந்தேனே, அதற்குத் தனது நீண்ட பேச்சில் இப்போதாவது ஜெய லலிதா பதில் கூறியிருக்கலாமே! ஏன் பதில் இல்லை?
17-8-1991 அன்றே “தினமணி” நாளேடு எழுதிய தலையங்கத்தில், “1974இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி திருமதி பண்டார நாயகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்ப தாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத் தாகு முன்னர் இதைப் பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை” என்று “தினமணி” அப்போதே எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், “1976இல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களைக் கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவின் அருகில் மீன் பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக் கப்பட்டது” என்று எழுதப்பட்டிருப்பதில் இருந்தே, தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது மீன் பிடிக்கும் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறுவது சுத்தப் பொய், பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜெயலலிதா, தனக்கு மிகவும் நெருக்கமான “தினமணி” நாளேட்டின் தலையங்கத்தைக் கூட நம்ப வில்லை என்றால், அதற்கு யார்தான் என்ன மருத்துவம் செய்ய முடியும்?
2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட, கச்சத் தீவுப் பிரச்சினையில் அ.தி.மு.க. ஆட்சி 1991ஆம் ஆண்டு பேரவையிலே கொண்டு வந்த தீர்மானத்தையும் நினைவூட்டி 22-9-2006 அன்று நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் – “I am sure you are also aware of the fact that the Legislative Assembly of Tamil Nadu had passed a Resolution in 1991 on this issue wherein the Tamil Nadu Legislative Assembly called upon the Government of India to take all urgent action and efforts necessary to get back Katchathivu and restore it to the Indian territory apart from moving the Sri Lankan Government to pay compensation for families of fishermen killed by the Sri Lankan Navy as well as those who have lost their belongings in the attacks by them. Government of India was also requested to move the Sri Lankan Government to create “Congenial conditions for Tamil Nadu fishermen to lead a peaceful life” — என்றும் நினைவூட்டியதை எல்லாம் ஜெயலலிதா வசதியாக மறைத்து விடுவது சரியானதுதானா?
கிறித்தவர்களும், மற்றவர்களும் ஆண்டு தோறும் கச்சத் தீவுக்குச் சென்று அந்தோணியார் திருவிழா வில் கலந்து கொள்வார்கள். 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தத் திருவிழாவே நடக்க வில்லை. 2010ஆம் ஆண்டு கழக ஆட்சியிலேதான் நான் முதலமைச் சராக இருந்த போது மத்திய அரசிடம் இதுபற்றிப் பேசி மீண்டும் அந்தக் கோவில் திருவிழா நடைபெற்றது.
23-7-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “The best possible solution is to get the island of Katchathivu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katchathivu could be upheld at the same time” – அதாவது கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் – என்று இப்படியெல்லாம் அன்றைக்கு குத்தகை – இறையாண்மை என்று எழுதிய வர் தான் இன்றைக்கு அருப்புக்கோட்டை கூட்டத்தில் என்னைப் பார்த்து கேள்விக்கணை தொடுக்கிறார்!
ஜெயலலிதா ஏற்கனவே ஒரு முறை வெளியிட்ட அறிக்கையிலே ஒன்றைச் சொல்லியிருக்கிறார். “கச்சத் தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுட னான பிரச்சினை. அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதல மைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந் தால் அன்றைக்கே கச்சத் தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்று அவரே வெளி யிட்டிருக்கிறார். இப்படிச் சொன்ன ஜெயலலிதா, என்னைப் பார்த்துக் கேள்வி கேட் பானேன்? மத்திய அரசைப் பார்த்தல்லவா கேட்க வேண்டும்! இவர்தான் மத்திய அமைச்சர்களைப் பார்ப்பதற்கே நேரம் ஒதுக்காதவர் ஆயிற்றே!
எனவே “கச்சத் தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது” என்றும்; “இந்தியா விற்கும் இலங்கைக்கும் இடையே நல்லுறவு வேண் டும் என்பதற்காகத் தான் கச்சத் தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது” என்றும்; “கச்சத்தீவில் இலங் கைக்கு உள்ள இறையாண் மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் ஏற்கனவே பேசிய, அறிக்கை விடுத்த ஜெயலலிதா, அவ்வளவையும் திரை போட்டு மறைத்து மூடி விட்டு, கச்சத் தீவை நான் தாரை வார்த்து விட்டேன் என்றும், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை மீட்பேன் என்றும் தற்போது தேர்தல் நேரத்தில் பேசுவது தான் உண்மையான கபட நாடகம்; மக்களை ஒரு முறை, இரண்டு முறை ஏமாற்றலாம், ஆனால் எப்போதும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி விட்டு அதன் மூலம் வெற்றி காண்போம் என்று ஜெய லலிதா எண்ணுவதை நாட்டு மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. அந்த உண்மை, வானத்திலேயே பறந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு தெரியாது; மண்ணில் இறங்கி வந்தால்தான் தெரியும்!’’என்று தெரிவித்துள்ளார்.