Supreme-Court-building-New-Delhi-India
 ஏழை விவசாயக்கடனை திருப்பிச் செலுத்தும் போது,  கோடிஸ்வரர்கள் ஓட்டம் பிடிப்பதேன் ? ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்திற்கு கேள்வி.
கடந்த மூன்று ஆண்டுகளில் 29 அரசு வங்கிகள் மூலம் ரூ 1.14 லட்சம் கோடி சொத்துக்கள் (வாராக்கடன்)  தள்ளுபடி என்று பிப்ரவரி 8 நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து  உச்ச நீதிமன்ற பெஞ்ச் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் (PSBs) மூலம் தள்ளுபடிச் செய்யப்பட்ட  பெரும் கடன் தொகை ரூபாய்  குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், ஏன் கடன்காரர்கள் பட்டியலை வெளியிட மறுக்கின்றீர்கள்?பொதுத்துறை வங்கிகளுக்கும் கடங்காரர்களுக்கும் இடையில் ஏதேனும் தவறான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளதா எனவும் காட்டமாகக் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு ரிசர்வ் வங்கி, பெயர்களை வெளியிட்டால், இந்திய பொருளாதாரமே பாதிக்கப் படும் என விளக்கம் அளித்தது.
பொதுத்துறை வங்கிகளில் 500 கோடிக்கும் மேல் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருந்தது.
இதனையடுத்து,  ரூபாய் 500 கோடிக்கும் மேல் கடனைப் பொதுத்துறை வங்கிகளில் திருப்பிச் செலுத்தாதவர் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் தாக்கல் செய்திருந்தது.
செவ்வாய்க்கிழமை , உச்சநீதிமன்றம்,  அரசுடமை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்ட வராக் கடன் பாக்கியை வசூலிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என இந்திய ரிசர்வ் வங்கியிடம்  கேள்வி எழுப்பியுள்ளது.
விவசாயக் கடன்களை திருப்பி செலுத்து வேண்டிய நெருக்கடிக்கு விவசாயிகளை வங்கிகள் தள்ளுவதால், விவசாயிகள் தம் விவசாய நிலத்தை விற்கவேண்டியுள்ளது ஆனால், சுமார் ஆயிரமாயிரம் கோடி திருப்பி செலுத்தத் தவறும் பெருநிறுவன முதலாளிகள்  ஓட்டம் பிடிப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி சமர்ப்பித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் குறிபிடப்பட்டுள்ள மோசமான கடன்கள் “நிலுவைத் தொகையின் அளவு மிகப் பெரியது”. எனவே இந்தப் பணத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கி எடுத்து வருகின்ற செயலாக்கத் திட்டத்தினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
mallya-759
இந்த வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு,  நாங்கள் எங்கள் விசாரணையை விரிவுப்படுத்த விழைகின்றோம். இனியும் கடன் தள்ளுபடி தொடரக் கூடாது. கடங்காரர்கள் ஓட்டம்பிடிக்க அனுமதித்து விட்டு, கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, வங்கிகள் அரசின் கருணையை எதிர்பார்ப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது. இது குறித்து  மத்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.