பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில்,’’தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைனில் விண்ணப்பி ப்பதற்கான நடைமுறை நேற்று தொடங்கியது. ஆனால், அதற்கான தொழில்நுட்ப வசதிகள் சரியாக செய்யப்படாததால் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பிய மாணவ, மாணவி கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தான் ஒற்றைச் சாளர முறையில் மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டு முதல் அனைத்து மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களும் ஆன்லைனில் பெறப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை ஆன்லைனில் நிரப்பி, அதை பதிவிறக்கம் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்தது. மாணவர் சேர்க்கையை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதில் இது சிறந்த முன்னேற்றம் தான். ஆனால், இதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு வலிமையாக வடிவமைக்கப்படாதது தான் சோகம். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான நேற்று ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்ற அனைவருக்கும் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. இதற்கான இணையதளம் நேற்று காலையிலேயே முடங்கி விட்டது தான் இதற்குக் காரணம் ஆகும். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் புகார் அளித்த போதிலும் முடங்கிய இணையதளத்தை சீரமைக்க கொண்டு வர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால் காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்தனர். நீண்ட தாமதத்திற்கு பிறகு நேற்றிரவு தான் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், ஆன்லைன் முறையில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்றும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாக செய்திகள் கிடைத்துள்ளன.
தொழில்நுட்பம் சார்ந்த புதிய முறையை அறிமுகப்படுத்தும் போது அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை செய்திருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை இணையதளத்தில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தாலும் இணையதளம் முடங்காத வகையில் அதன் சர்வர் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை செய்யாதது அண்ணா பல்கலைக்கழகத்தின் தவறு தான். இந்த தவறை சரி செய்து மாணவர் சேர்க்கை இணையதளம் முடங்காமல் இருப்பதை அண்ணா பல்கலை. உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் இதற்காக அதிக அளவில் செலவழிக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, முதல் தலைமுறை மாணவர்களில் பலருக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதே தடுமாற்றத்திற்குரிய ஒன்றாகத் தான் இருக்கும். இவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு வழிகாட்டிகள் தேவை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பொதுச்சேவை மையங்களின் உதவியை இதற்காக மாணவர்கள் நாடலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. ஆனால், பொதுசேவை மையங்களில் அரசின் பிற சேவைகளை பெற மக்கள் வருவர் என்பதால் அங்கு மாணவர்களுக்கு முழுமையான வழிகாட்டுதலும், உதவியும் கிடைக்காது.
கடந்த காலங்களில் விண்ணப்ப வினியோகமும், ஆன்லைன் விண்ணப்பமும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 60 மையங்களில் நடைபெற்று வந்தது. இம்மையங்கள் அனைத்துமே அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தன. அம்மையங்களை நிர்வகிப்பவர்கள் அனைவருமே பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் என்பதால் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
எனவே, பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் எளிதாக விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் உதவி மையங்களை அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முன்வர வேண்டும். இந்த மையங்களில் வழங்கப்படும் இலவசமாக சேவை வழங்கப்பட வேண்டும்; இதற்காக மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்றும் அந்த மையங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.