
ஜெனீவா,
ஐ.நா. சபையின் பொருளாதார தடைகளையும், உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை அணு குண்டு சோதனைகளை நடத்திய அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்து உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கைக்காக ஐ.நா. சபையும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து சமீபத்தில் நடவடிக்கை எடுத்தன. ஆனாலும், அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று அந்த நாட்டில் உள்ளூர் நேரப்படி காலை 5.33 மணிக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் நடுத்தர ஏவுகணை சோதனை நடந்தது. ஆனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தாலும், வடகொரியாவின் சோதனை முயற்சிக்கு ஐநா பாதுகாப்புச்சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை தரத்தை மேம்படுத்த கூடாது என்ற ஐநா தீர்மானத்தை வடகொரியா இனிமேலும் மீறும் வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக ஐநா கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel