கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் வக்கீல் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மீண்டும் களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க. சார்பில் கொளத்தூர் தொகுதியில் ஜெ.டி.சி.பிரபாகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த முறை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர்.
மக்கள் நலக்கூட்டணியில் கொளத்தூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் வட சென்னை மாவட்ட பொறுப்பாளரான வக்கீல் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். எம்.கே.பி. நகரில் வசித்து வரும் அவர் அப்பகுதியில் கேபிள் டிவி தொழில் செய்து வருகிறார். மக்கள்நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் விலகினர். அப்போது தே.மு.தி.க. வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த யுவராஜூம் விலகினார்.
பின்னர் அவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். இவருக்கு பதிலாகவே வடசென்னை மாவட்ட பொறுப்பாளராக மதிவாணன் நியமிக்கப்பட்டிருந்தார். முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நலக்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போல தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி அக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.