என். சொக்கன்
அரசியல் கட்சிகள் தங்களுடைய தொண்டர்களைக் கூட்டி அவ்வப்போது மாநாடுகளை நடத்துகின்றன, தேர்தல் நேரத்தில் அதற்கென விசேஷ மாநாடுகளும் நடைபெறுவதுண்டு.
இவற்றை முன்பு ‘மகாநாடு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள், ‘மகா’ என்ற வடமொழிச்சொல்லை மாற்றி, அதே பொருள், அதே ஒலியைக்கொண்ட ‘மா’ என்ற தூயதமிழ்ச்சொல்லைச் சேர்த்து, ‘மாநாடு’ என்ற சொல் உருவாக்கப்பட்டது.
‘மா’ என்றால் பெரிய, ‘நாடு’ என்றால் இந்தியா, பாகிஸ்தான்போல ஒரு நாடு, இரண்டும் சேர்ந்தால் என்ன பொருள் வரும்?
நாடு என்றால் countryதானா? அப்புறம் தமிழ்நாடு என்கிறோமே, அது என்ன தனிநாடா? மாநிலமல்லவா?
தமிழ்நாட்டைவிடுங்கள், அதற்குள் இருக்கும் சோழநாடு, பாண்டியநாடு போன்றவையும் ‘நாடு’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனவே, நாஞ்சில்நாடு, கொடநாடு என்று இந்தச் சொல்லை எங்கும் கேட்கிறோமே.
ஆக, ‘நாடு’ என்றால் மனிதர்கள் வாழும் நிலம் என்று பொருள் என விளக்குகிறார் ரா.பி.சேதுப்பிள்ளை. அதுதான் பின்னர் Country/ Nation என்ற பொருளில் பயன்படுத்துவதாக மாறிவிட்டது.
இதன்படி, ‘மாநாடு’ என்பதற்குப் பல ஊர்களைச் சேர்ந்தவர்களும் வந்து, தங்கி, பங்கேற்றுப் பேசுகிற ஓர் இடம் எனப் பொருள் எடுத்துக்கொள்ளலாம் என்று ஊகிக்கிறேன்.
கொஞ்சம் வேடிக்கையாக யோசித்தால், ‘மா’ என்ற சொல் மாம்பழத்தையும் குறிக்கும், ஆகவே, மாம்பழ நிபுணர்கள் ஒரு மாநாடு நடத்தினால், அது ‘மாமாநாடு’ ஆகலாம். பலவிதமான மாம்பழங்களைத் தேடிச் சென்று சுவைப்பவர்கள் ஒரு மாநாடு நடத்தினால், அதனை ‘மாநாடுவோர் மாநாடு’ என்று அழைக்கலாம்.
‘மா’ என்ற சொல், ஒரே எழுத்து, அது ஒரு பொருளைத் தருகிறது. இவ்வகையான சொற்களை இலக்கணத்தில் ‘ஓரெழுத்து ஒருமொழி’ என்று அழைப்பார்கள். இதற்கு மேலும் சில உதாரணங்கள்: தா, வா, போ, தை, வை, கை, மை, தீ, ஈ, பூ, கோ, பை…
(தொடரும்)