கிறிஸ்துவ மதம், சாதியால் கறைபட்டு போய்விட்டது என்று ஆதங்கப்படுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரும் எழுத்தாளருமான ரவிக்குமார்.  ” சாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார்கள்”  என்ற தலைப்பிலான அவரது முகநூல் பதிவு:

தலித் நுழைய "தடை" விதிக்கப்பட்ட தேவாலயம்
தலித் நுழைய “தடை” விதிக்கப்பட்ட தேவாலயம்

யோலா கல்லூரியில் நடைபெற்ற தலித் கிறித்தவர்களின் மாநாட்டில் நேற்று (14.04.2016) கலந்துகொண்டேன். தடம் தேடி என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை மாநாட்டில் வெளியிட்டார்கள். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் எவ்வளவு கிறித்தவர்கள் இருக்கிறார்கள் அதில் தலித் கிறித்தவரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிறித்தவர்களின் எண்ணிக்கையில் தலித் கிறித்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதை அந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அப்படியிருந்தும் அவர்கள் திருச்சபை நிர்வாகத்தால் பல்வேறு சாதிய பாகுபாடுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதையும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்து மதத்துக்குள் சிறைபட்டுக்கிடக்கும் தலித்துகள் அந்தச் சிறையிலிருந்து வெளிவராமல் கிடப்பதற்குக் காரணம் இந்துமதம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதல்ல, மாறாக அங்கிருந்து வெளியேறி இன்னொரு மதத்தைத் தழுவினாலும் அவர்கள் விரும்பும் சமத்துவத்தை அடைய முடியவில்லை என்பதுதான்.
கிறித்தவம் சாதியால் கறைபட்டுப்போய்விட்டது என்பதனால்தான் அம்பேத்கர் கிறித்தவத்தை விலக்கிவிட்டு பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்தநிலை இப்போது இன்னும் மோசமாகியிருக்கிறது என்பதையே தடம் தேடி என்ற அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.
தலித்துகளில் பெரும்பாலோர் இந்துக்களாகவே தொடர்வதற்கு சாதிக் கிறித்தவர்களே உதவிக்கொண்டிருக்கிறார்கள். இந்து மதத்தைக் காப்பாற்றும் சாதிக் கிறித்தவர்கள் மனம் திரும்பாதவரை தலித் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தலித்துகளுக்கும் விடிவு இல்லை” –   இவ்வாறு தனது முகநூல் பதிவில் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

(படம்: செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில்  உள்ள தேவாலயம். இந்த தேவாலயத்துக்குள் தலித் கிறிஸ்தவர்கள் வரக்கூடாது என்று எதிர்க்கிறார்கள் சாதி கிறிஸ்தவர்கள் . இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த பிரச்சினையால் கடந்த 20 வருடங்களாக தேவாலயம் மூடப்பட்டிருக்கிறது.)