viko1
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி, தமாகா போட்டியிட உள்ள 130 தொகுதிகளின் பட்டியலை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வியாழக்கிழமை (ஏப்.14) அறிவித்தனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைகோ(மதிமுக), ஞானதேசிகன்(தமாகா), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), ஆர்.முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட்), தொல்.திருமாவளவன் (விசிக) ஆகியோர் மக்கள்நலக் கூட்டணி சார்பில் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியலை ஒவ்வொருவரும் வாசித்தனர்.
யாருக்கு எவ்வளவு தொகுதிகள்: தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. சார்பில் போட்டியிடும் தொகுதிகள் எவை எனப் பிரிக்கப்பட்டுள்ளன. தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 29 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தொகுதிகளின் பட்டியலை மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ள நிலையில், போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை தனித் தனியே இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளனர்.
வைகோ நாளை முதல் பிரசாரம்: மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை (ஏப். 16) தொடங்குகிறார். அப்போது, மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அவர் வெளியிடுகிறார். மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அந்தக் கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை மாலை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டனர். அப்போது, பேசிய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, தனது பிரசார தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசியது:
மதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர்-தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.
பிரசாரம் தொடக்கம்: எனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமையன்று (ஏப்.16) சென்னை அண்ணாநகரில் இருந்து தொடங்குகிறேன். அப்போது மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும். எனது பிரசாரம் இடைவிடாது தொடர்ச்சியாக இருக்கும். மே 14-ஆம் தேதி வரை பிரசாரம் செய்வேன் என்றார் வைகோ.
இதர கட்சிகள் எப்போது: மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை 2 நாள்கள் கழித்து வெளியிடும் என அந்தக் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் அறிவித்தார். இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், கட்சியின் மாநில குழுக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், கட்சியின் மாநில குழுக் கூட்டம் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளர் பட்டியலை இரண்டு நாள்களில் வெளியிடும் என்று வியாழக்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
தேமுதிக பட்டியல் ஏற்கெனவே வெளியீடு: தேமுதிக தனது வேட்பாளர் பட்டியலை நான்கு கட்டங்களாக வெளியிட்டுள்ளது. அக்கட்சி போட்டியிடும் 104 தொகுதிகளில் 75 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சி புதன்கிழமையே வெளியிட்டது. பிரசாரம் தொடக்கம்: மக்கள் நலக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் தங்களது பிரசாரத்தை தனித்தனியாக தொடங்கவுள்ளனர். தேவை ஏற்பட்டால் இணைந்து பிரசாரம் செய்வோம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த 11-ஆம் தேதி தொடங்கியுள்ளார். கட்சியின் மகளிர் அணித் தலைவர் பிரேமலதாவும் தனது பிரசாரத்தை தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.